வேதாந்த சாரம் (நூல்)

வேதாந்த சாரம் (நூல்) எனும் சமசுகிருத மொழி நூலினை எழுதியவர் ஸ்ரீ சதானந்தர் ஆவார். சமசுகிருத மொழியில் 227 சுலோகங்களுடன் அமைந்த இந்த அத்வைத வேதாந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் திருமதி. கல்யாணி வெங்கட்ராமன்.[1].[2].இராமகிருஷ்ண மடத்தினர் இந்நூலை 27-02-2009-இல் வெளியிட்டுள்ளனர்.

வேதாந்த சாரம் (நூல்)
நூலாசிரியர்மூல நூலாசிரியர்: ஸ்ரீ சதானந்தர்
தமிழாக்கம்: திருமதி. கல்யாணி வெங்கட்ராமன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைஅத்வைத வேதாந்தம்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
வெளியிடப்பட்ட திகதி
27-02-2009
பக்கங்கள்258
ISBN978-81-7823-517-2

நூலாசிரியரின் காலம்

இந்நூலின் ஆசிரியரான ஸ்ரீ சதானந்தரின் முழுமையான வரலாறு கிடைக்கவில்லை. இருப்பினும் இவர் 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ வாழ்ந்திருக்கக் கூடும் என சுபோதினீ எனும் வேதாந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய நரசிம்ம சரசுவதியின் பரமகுருவாக ஸ்ரீ சதானந்தர் இருந்தவர் என அத்வைத வேதாந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.

நூலின் உரையாசிரியர்கள்

இந்நூலுக்கு ஆறு விளக்க உரை நூல்கள் எழுதப்பட்டுள்ளது.

  1. ஸ்ரீ அபதேவர் எழுதிய பால போதினீ
  2. ஸ்ரீ நரசிம்ம சரசுவதி எழுதிய சுபோதினீ
  3. ஸ்ரீ இராமதீர்த்தர் எழுதிய வித்வன் மனோரஞ்சனீ
  4. ஸ்ரீ இராமச்சந்திரானந்த சரசுவதி எழுதிய வேதாந்த சார வியாக்கியானம்
  5. வேதாந்த சார டீகா (குறிப்புகள்)
  6. வேதாந்த சார டிப்பணீ (அடிக்குறிப்புகள்)

ஐந்து மற்றும் ஆறுக்கான விளக்க உரை நூலாசிரியர்கள் விவரம் தெரியவில்லை.

நூலின் உள்ளடக்கம்

வேதாந்தம் எனப்படும் உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றில் கூறியுள்ள பிரம்மத்தைக் குறித்து விவரிப்பதுடன், அந்த பிரம்மத்தை அடையத் தக்க வழிகளை விளக்குகிறது.

ஆத்ம ஞானத்தை அடைய விரும்பும் சீடன், மனத்தூய்மை, புலனடக்கம், பொறுமை மற்றும் அகிம்சை போன்ற நற்பண்புகளுடன், விவேகம், வைராக்கியம் மற்றும் முமுச்த்துவம் (தொடர் சாதனை செய்தல்) ஆகிய குணங்களுடன் குருவை அடைந்து, வேதாந்த சாத்திரங்களை சிரவணம் (கேட்டல்), செய்து, பின் கேட்டதை மனனம் (மனதில் சிந்தித்தல்) செய்து, மனதில் உள்ள அக்ஞானம் நீங்கி ஆத்மாவைக் குறித்த ஞானத்தை அடைந்து, அந்த ஞானத்தை மனதில் தொடர்ந்து நிதித்யாசனம் செய்து சீவ முக்தி நிலையை அடைந்து, வினைப்பயன் முடிந்து உடலை துறந்த பின், மறு பிறப்பற்ற விதேக முக்தி அடைகிறான்.

நூலின் சிறப்பு

இந்நூலில் பிரம்ம தத்துவத்தை குறித்த தத்துவமசி என்ற மகாவாக்கியம், மற்றும் அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் ஆகிய வேதாந்த மகாவாக்கியங்களை எளிமையாக எடுத்துரைக்கிறது. பதஞ்சலி முனிவர் அருளிய சமாதியின் இரண்டு நிலையான நிர்விகல்ப சமாதி மற்றும் சவிகல்ப சமாதி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் இரண்யகர்பன், ஐம்பூதங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பஞ்சீகரணத்தால் எவ்வாறு பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் தோன்றுகிறது என்பது குறித்தும், அத்யாரோபம், அபவாதம், அறியாமை, கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் குறித்தான வேதாந்த கலைச்சொற்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.