வில் பொறி
வில் பொறி (Venus Flytrap, Dionaea muscipula) என்பது வட அமெரிக்காவில் உள்ள பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இது திரோசிரேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடி ஈரமான நீர்த்தேக்கப் பகுதிகளில் வளரும். இதன் இலைகள் கொத்தாக தலையை ஒட்டியோ சிறிது மேலெழுந்தவாறோ ரோஜாப்பூவின் இதழடுக்கு போல இருக்கும்.
வில் பொறி | |
---|---|
![]() | |
வில் பொறி இலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Droseraceae |
பேரினம்: | Dionaea |
இனம்: | D. muscipula |
இருசொற் பெயரீடு | |
Dionaea muscipula Sol. ex J.Ellis | |
![]() | |
Venus Flytrap distribution | |
வேறு பெயர்கள் | |
|
அமைப்பு.
வில்பொறி தாவரத்தில் இலைகள் 3 முதல் 12 செ.மீ வரை நீளமுடையது. இலையின் காம்பு விரிந்து இறகு போல அமைந்திருக்கும். இதன் மேல் பகுதியில் இலையின் பரப்பு இரண்டு பகுதிகளாக உள்ளது. இந்த இலைகள் பூச்சிகளைச் சட்டென்று பிடிப்பதற்குத் தக்கவாறு அமைந்துள்ளன. இவைகளில் தனியாக மடங்கக்கூடிய இரண்டு பகுதிகள் உள்ளன. இலைகளின் ஓரங்களில் முள் போன்ற பற்கள் 12 முதல் 20 வரை காணப்படும். பாதி மட்டும் திறந்த புத்தகம் போல் இருக்கும். அதன் பரப்புக்ளில் உணர்ச்சியுள்ள முடிகள் உள்ளன. இவை துப்பாக்கியில் உள்ள குதிரையின் வில்பொறி போல இருக்கும். இலையின் உள் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும் இலையின் மத்திய பகுதியில் மிக அதிகமாக சீரண சுரப்பிகள் உள்ளன.
பூச்சிகளைப் பிடித்தல்

ஏதாவது ஒரு பூச்சி இதன் வண்ணத்தில் கவரப்பட்டு இலையின் மீது ஊர்ந்து செல்லும் போது இதன் உணர்ச்சியுள்ள முடியில் (Trigger) மேல் பட்டால் அந்தக் கணத்திலேயே இதன் இலையின் இரண்டு பகுதிகளும் மின்சாரம் பாய்ச்சியது போல மூடிக் கொள்ளும். இதை வில்பொறி அமைப்பு (Venus fly trap) என்று அழைப்பர். இது 1/5 வினாடிகளில் நடக்கிறது. பூச்சி ஒரு சிறு சிறையில் அடைக்கப்பட்டு விடும். இலையின் விளிம்பில் உள்ள முள் போன்ற பற்கள் ஒன்றோடு ஒன்று கவ்வி பூச்சியை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். மேலும் மெல்ல மெல்ல பூச்சியை இறுக்கிக் கொண்டே போகும். இந்த இறுக்கத்தில் பல பூச்சிகள் இறந்துவிடும்.
சீரணமாதல்
இத்தாவரங்களின் இலைகளில் செரிமான சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிமான நீர் பூச்சியை மெதுவாக சீரணிக்கிறது. பூச்சியின் உடல் செரிமானமான பிறகே இலை திறந்துகொள்ளும். இதற்கு சுமார் 5 முதல் 10 நாட்கள் ஆகும். அல்லது பூச்சி முழுவதும் சீரணமாகும் வரை மூடியே இருக்கும். செரிக்காத பூச்சியின் பகுதிகள் இலை திறக்கும்போது கீழே விழுந்துவிடும். ஒரு இலை இரண்டு அல்லது மிகவும் அதிகமாக 3 முறை மட்டுமே பூச்சியைப் பிடிக்கிறாது. மூன்றாவது முறை பூச்சி பிடிக்குமானால் அந்த இலை மூடியே இருக்கும். மீண்டும் அது திறப்பதே இல்லை.
அலங்காரத் தாவரம்
இச்செடிகளை வீடுகளில் தொட்டியில் வளர்க்கிறார்கள். ஒவ்வொரு இலையும் பூச்சியைப் பிடிக்கிறது. இச்செடியின் மையப் பகுதியில் இருந்து 30 செ.மீ உயரமுள்ள காம்பு வளர்கிறது. இதில் சிறிய வெள்ளை அல்லது மஞ்சள் நிறப்பூக்கள் காணப்படுகின்றன. பூச்சி உண்ணும் தாவரங்களில் இச்செடி அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
விக்கிக் காட்சியகம்

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு
வரிசைஎண் | குடும்பம் | பேரினம் | வகைகள் |
---|---|---|---|
1 | பிப்ளிடேசியீ | பிப்ளிஸ் | 2 |
ரோரிடுலா | 1 | ||
2 | செப்பலோடேசியீ | செபலோட்டசு | 1 |
3 | திரோசிரேசியீ | ஆல்ட்ரோவாண்டா | 1 |
டயோனியா | 1+1 | ||
திரோசிரா | 90 | ||
திரொசோபில்லம் | 2 | ||
4 | லண்டிபுளோரேசியீ | பிங்குவிக்குலா | 40 |
ஜென்லிசியா | 1 | ||
பயோவுலேரியா | 1 | ||
யூட்ரிக்குளோரியா | 275 | ||
பாலிபாம்போலிக்ஸ் | 2 | ||
5 | நெப்பந்தேசியீ | நெப்பந்திசு | 70 |
6 | சாரசீனியேசியீ | டார்லிங்டோனியா | 1+1 |
ஹிலியாம்போரா | 3 | ||
சாரசீனியா | 6 |
உசாத்துணை
ஏற்காடு இளங்கோ. ';அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.
மேற்கோள்கள்
- Schnell, D., Catling, P., Folkerts, G., Frost, C., Gardner, R., et al. (2000). Dionaea muscipula. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Listed as Vulnerable (VU A1acd, B1+2c v2.3)