விடுகாதழகிய பெருமாள்

விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது[1].


இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும்[2] சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.

விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது[3]. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.


குறிப்புகள்

  1. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 103
  2. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 104, 105
  3. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 106

உசாத்துணைகள்

  • சாந்தலிங்கம், சோ., வரலாற்றில் தகடூர், புது எழுத்து வெளியீடு, காவேரிப்பட்டினம். 2006.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.