இராசராச அதியமான்

இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட அரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன[1].


இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது[2]. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன[3].

குறிப்புகள்

  1. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102
  2. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102
  3. சாந்தலிங்கம், சோ., 2006, பக். 103

உசாத்துணைகள்

  • சாந்தலிங்கம், சோ., வரலாற்றில் தகடூர், புது எழுத்து வெளியீடு, காவேரிப்பட்டினம். 2006.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.