இரா. நெடுஞ்செழியன்

இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.

இரா. நெடுஞ்செழியன்
தமிழ்நாட்டு நிதியமைச்சர்
பதவியில்
1967-1976,1977-1988,1991-1996
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தொகுதி ஆத்தூர்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 11, 1920(1920-07-11)
திருக்கனாபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறப்பு சனவரி 12, 2000(2000-01-12) (அகவை 79)
சென்னை
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) விசாலாட்சி
பிள்ளைகள் மதிவாணன்
இருப்பிடம் சென்னை
கல்வி முதுகலைமானி தமிழ்
கையொப்பம்

குடும்பம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில் 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) [1] என்னும் மகன் உள்ளனர். இவர் மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும் சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர். [2]

புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

கல்வி

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன். கல்வி முடிந்ததும் 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில் அவிநாசி சாலையிலிருந்து யூ.எம்.எஸ்.விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.[3]

அரசியல்

சுயமரியாதை இயக்கத்தில்

பல்கலைக்கழகத்தில் பயிலும்பொழுதே இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அதில் சேர்ந்தார்.

திராவிடர் கழகத்தில்

இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்ணணிபேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். அப்பொழுது பெரியாரைப்போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்

பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழு செயலாளராக இருந்தார். 1957 முதல் 1962 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவிவகித்தார்.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து க. இராசராமோடு இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1977ஆம் ஆண்டில் ம.தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார்.

அ.தி.மு.க. (நால்வர் அணி)

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

மீண்டும் அ.தி.மு.க.வில்

பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.

அமைச்சர்

  • 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • 1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
  • 1971 முதல் 1975 வரை கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.
  • 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

நூல்கள்

  1. எழுச்சி முரசு, 1946, திராவிட மாணவர் கழகம், பொன்மலை. (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை) [4]
  2. கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1
  3. சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம், திராவிடர் கழகம், சென்னை.
  4. பகுத்தறிவு முழக்கம், திராவிடர் கழகம், சென்னை
  5. பண்டைக் கிரேக்கம், 1954, திராவிடப்பண்ணை, திருச்சி
  6. பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு
  7. புதிய பாதை, 1948, ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், புதுச்சேரி. [5]
  8. மதமும் மூடநம்பிக்கையும், திராவிடர் கழகம், சென்னை
  9. மறைந்த திராவிடம், 1953 மன்றம் பதிப்பகம், சென்னை-1
  10. மொழிப்போராட்டம், 1948 அக்டோபர் 18, திராவிடப்பண்ணை, திருச்சி.
  11. திமுக
  12. தீண்டாமை
  13. திருக்குறள் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.
  14. திருக்குறளும் மனுதர்மமும்
  15. நீதிக்கட்சியின் வரலாறு
  16. வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் (தன்வரலாற்று நூல்), நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.
  • இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்

இதழாளர்

  • மாலைமணி நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  • மன்றம் என்ற மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார்.
  • திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

அச்சகமும் பதிப்பகமும்

மன்றம் அச்சம் என்னும் பெயரில் ஓர் அச்சகத்தையும் மன்றம் பதிப்பகத்தையும் 26, நைனியப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1 என்னும் முகவரியில் 1953 மார்ச் மாதம் நிறுவினார். [6]

மறைவு

இவர் 12-1-2000ல் காலமானார்.

வெளியிணைப்பு

  1. பண்டைக்கிரேக்கம், இரா. நெடுஞ்செழியன்
  2. மொழிப்போராட்டம், இரா. நெடுஞ்செழியன்

சான்றடைவு

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:1-7-1951, பக்கம் 7
  2. [https://www.eihassociatedhotels.in/investor_relations/notice-ad-08-07-2019-makkal-kural.pdf மக்கள் குரல் 10-7-2019,பக்.3
  3. குடியரசு, 3-3-1945, பக்.9
  4. குடி அரசு 14-12-1946 பக்.5
  5. குடி அரசு, 10-4-1948, பக்.10
  6. திராவிடநாடு (இதழ்) நாள்:22-3-1953, பக்கம் 1
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.