இரா. செழியன்

இரா. செழியன் (28 ஏப்ரல் 1923 - 6 சூன் 2017) அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம். சனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

இரா. செழியன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (கும்பகோணம் மக்களவைத் தொகுதி)
பதவியில்
1967–1977
முன்னவர் சி. ஆர். பட்டாபிராமன்
பின்வந்தவர் தொகுதி கலைக்கப்பட்டது
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (பெரம்பலூர் மக்களவைத் தொகுதி)
பதவியில்
1962–1967
பிரதமர் ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திராகாந்தி
முன்னவர் எம். பழனியாண்டி
பின்வந்தவர் ஏ. துரையரசு
தனிநபர் தகவல்
பிறப்பு 28 ஏப்ரல் 1923
திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறப்பு 6 சூன் 2017(2017-06-06) (அகவை 94)
வேலூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ச. பிரேமா
தொழில் அரசியலாளர்
சமயம் தமிழ்

இவர் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் இரா. நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவார்.[1]

கல்வி

பட்டுக்கோட்டையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி.ஆனர்ஸ (கணக்கு) [2]

அரசியல் வாழ்க்கை

மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது அண்ணாத்துரையுடன் நெருக்கமாகப் பழகினார். அவரைத் தம் தலைவராகவும் வழிகாட்டியாகவும் கொண்டு அரசியல் வாழ்வை நடத்தினார்.

  • 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் வெற்றி பெற்றார்.[3]
  • 1967 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கும்பகோணத்தில் வெற்றிபெற்றார்.
  • 1977இல் தி.மு.க.விலிருந்து விலகி சனதாக் கட்சியில் சேர்ந்து இந்திய அரசியலில் ஈடுபட்டார். அப்போது செயப்பிரகாசு நாராயணனுடன் இணைந்து செயல்படுகிற வாய்ப்புக் கிட்டியது.
  • 1977 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
  • 1978 இல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
  • 1988 இல் சனதாக் கட்சி உடைந்து வி. பி. சிங் தலைமையில் சனதா தளம் என்னும் கட்சி தோன்றியது. சனதா தளத்தில் செழியன் முக்கிய பொறுப்பு வகித்தார்.
  • இராமகிருட்டின எக்டே தலைமையில் லோக தளம் உருவானது. அக்கட்சியில் துணைத் தலைவர் ஆனார்.
  • 2001இல் அரசியலிலிருந்து விலகினார்[4].

சாதனைகள்

Shah Commission Report -Lost and Regained-நூல்
Parliament for The People-நூல்
  • 1975-76 நெருக்கடிக் கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. மூன்று மடலங்கள் கொண்ட இவ்வறிக்கையை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட்டது. செழியன் அதனை மீட்டெடுத்து ஒரு நூலாக வெளியிட்டார்[5]. (Shah Commission Report -Lost and Regained)
  • இருபது ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து உரையாற்றினார். பாராளுமன்றத்தில் அவர் பேசிய உரைகளின் தொகுப்பு நூலாக (Parliament for The People) வெளிவந்துள்ளது[6].
  • 1934 ஆம் ஆண்டு முதல் அவர் சேகரித்த 6500 நூல்களை வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக கொடுத்தார்.
  • தமிழ்நாடு அரசு 2005 ஆம் ஆண்டில் பெரியார் விருது செழியனுக்கு வழங்கியது[7].

நூல்கள்

  1. ராஜாடி ராஜா, 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1
  2. பொது அறிவு, 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1

குடும்பம்

இரா. செழியனுக்கும் சென்னை அரசு சம்பளக்கணக்கு துணை அலுவலர் என். சண்முகசுந்தரம் மகள் பிரேமாவிற்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 26-8-1959ஆம் நாள் சென்னை பூந்தமல்லி சாலையிலிருந்த 495ஆம் கதவெண்கொண்ட "ஆற்காடு வில்லா"வில் திருமணம் நடந்தது.[8]

மறைவு

வேலூரில் தங்கிருந்த இரா. செழியன் உடல் நலக் குறைவால் தமது 95வது அகவையில், 2017 சூன் 6 அன்று காலமானார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.