வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும் பிற இலக்கண ஆசிரியர்களைப் போல முன்னோர் இலக்கண நூற்பாக்களை இவர் எடுத்தாளவில்லை. தமிழ் மொழியின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு இலக்கணம் பாடியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ’ஆங்கிலியர் அந்தாதி’ பாடியவர்.[1]

இளமை

தமிழ்நாட்டில் நெல்லைச் சீமையில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை- பேச்சிமுத்து அம்மையாருக்கு 1839 இல் மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.[2] தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும் அருணகிரி நாதரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘ திருப்புகழ் சுவாமிகள்’ என்றும். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.[3]

இயற்றிய நூல்கள்

தண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும். இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவை. அவற்றில் பாதி பாடல்களுக்கு மேல் இவராலேயே கிழித்தெறியப்பட்டன. எஞ்சியுள்ளவை 50 ஆயிரம் பாடல்கள்.

நூல்கள்

  • திருவரங்கத் திருவாயிரம்
  • சடகோபர் சதகத்தந்தாதி
  • பெருமாளந்தாதி

தோத்திரப் பாடல்கள்

  • அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்

வரலாற்று நூல்கள்

  • புலவர் புராணம்
  • திருமாவாத்தூர் தலபுராணம்
  • அருணகிரிநாதர் புராணம்

இலக்கண நூல்கள்

நாடக நூல்

  • முசுகுந்த நாடகம்

நீதி நூல்

  • மனுநெறித் திருநூல்
  • நான்குநூல்

சமூக நூல்

  • ஆங்கிலியர் அந்தாதி

பிற

  • கௌமார முறைமை
  • தியானாநுபூதி
  • சத்திய வாகசம்(உரைநடை நூல்)

தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர் தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனின் அது பேய் எனப் பாடுகிறார். [4]

இசை

தமிழிசை வளர்ச்சியில் இவருக்குத் தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டுவந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.

கருவிநூல்

  • புலவர் இரா இளங்குமரன் எழுதிய ;இலக்கண வரலாறு' என்னும் நூலை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்புரை தமிழ் இலக்கண நூல்கள் 2007, பக்கம் 724, நூல்

அடிக்குறிப்பு

  1. ஆங்கிலியர் அந்தாதி. முத்தமிழ் அருள்நெறி மன்றம். 1985.
  2. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வரலாறு. சரவணம்பட்டி, கோவை.: சிரவை கௌமார சபை வெளியீடு. 1998.
  3. விடுதலை வேள்வியில் தமிழகம். மனிதம் பதிப்பகம். 2012. பக். 117 - 122.
  4. தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில் அஃது உணர், அலகையின் தாழ்வு எனல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.