இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.

இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.[1]

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காடனார் என்னும் பெயருடன் சங்க காலத்தில் ஒரு புலவர் வேறு. திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய இடைக்காடனார் என்பவரும் வேறு. இங்குக் கூறப்படும் இடைக்காடனார் ஒரு சித்தர்.

இடைக்காடு என்பது இவர் வாழ்ந்த ஊர். இந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள இடைக்காடு என்றும், மதுரைக்குகுக் கிழக்கில் உள்ள இடைக்காடு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், முதலானவற்றை முன்னிறுத்திப் பாடுவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – யாவும்
சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே – பாடல் 14
தாந் திமித்திமி தந்தக் கோனாரே
தீந் திமித்திமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே
அண்ணாக்கை ஊடே அடைத்தே அமுதுண் – பாடல் 29 (யோகாசன முறை)
பாலில் சுவைபோலும் பழத்தில் மதுப்போலும்
நூலில் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே – பாடல் 50
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – பாடல் 56
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போல்அலைந்தால் நன்மைஉண்டோ கல்மனமே – பாடல் 62
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்திவிளக்கு ஆக்குகநீ புல்லறிவே – பாடல் 72
கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ் வார்போலே
மெய்விளக்கு உன் உள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே – பாடல் 74
கற்றூணைப் போல்மனத்தைக் காட்டு மயிலே – வரும்
காலனையும் தூரத்தில் ஓட்டுமயிலே – பாடல் 89
அப்புடனே உப்புசேர்ந்து அளவுசரி ஆனதுபோல்
ஒப்புறவே பிரம்முடன் ஒன்றிநில்லு மடவனமே (அன்னமே) –பாடல் 94
மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
கானமாய் ஊதுகுழல் - கோனே
கானமாய் ஊதுகுழல் – பாடல் 98
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே – உன்
குரங்குமன மாடொன்று அடக்கிவிடு கோனே – பாடல் 133

தியானச் செய்யுள்

ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!

இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து; முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது.

பதினாறு போற்றிகள்

1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி! 2. கருணாமூர்த்தியே போற்றி! 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி! 4. இளநீர் பிரியரே போற்றி! 5. உலகரட்சகரே போற்றி! 6. அபயவரதம் உடையவரே போற்றி! 7. மருந்தின் உருவமானவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. ஒளிமயமானவரே போற்றி! 10. கருவை காப்பவரே போற்றி! 11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி! 13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி! 14. அங்குசத்தை உடையவரே போற்றி! 15. தேவலீலை பிரியரே போற்றி! 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஓதப்படும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. அரு. ராமநாதன், சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், சென்னை 24, ஆறாம் பதிப்பு 1987

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.