ரூர் இடைப்பகுதி

ரூர் இடைப்பகுதி சண்டை (Battle of Ruhr Pocket) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இது ஒரு சுற்றிவளைப்புச் சண்டையாகும் (battle of encirclement). மார்ச்-ஏப்ரல் 1945ல் நாசி ஜெர்மனியின் ரூர் பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைகளை மேற்கத்திய நேசநாட்டுப் படைகள் சுற்றி வளைத்துப் பிடித்தன.

ரூர் இடைப்பகுதி சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

கைப்பற்றப்பட்ட ஜெர்மானியப் போர்க்கைதிகளைக் காவல் காக்கும் அமெரிக்கப் படைவீரர்
நாள் மார்ச் 7 - ஏப்ரல் 21, 1945
இடம் ரூர் பகுதி, ஜெர்மனி
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஒமார் பிராட்லி
கொர்ட்னி ஹோட்ஜஸ்
வில்லியம் ஹூட் சிம்சன்
பெர்னார்ட் மோண்டோமரி
வால்டர் மோடல் 
பலம்
தெரியவில்லை ~400,000
இழப்புகள்
தெரியவில்லை இறந்தவர் எண்ணிக்கை தெரியவில்லை
300,000 போர்க்கைதிகள்

வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகளின் மூலம் 1945 மார்ச் முதல் வாரம் நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றின் மேற்குக் கரையை அடைந்தன. அடுத்து ஜெர்மனியின் உட்பகுதியாகிய ரூர் பிரதேசத்தை ஒரு பரந்த முனையில் தாக்க நேசநாட்டு ஐரோப்பியத் தலைமை தளபதி டுவைட் டி. ஐசனாவர் திட்டமிட்டார். அதன்படி வடக்கில் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான 21வது ஆர்மி குரூப்பும் தெற்கில் ஜெனரல் ஒமார் பிராட்லி தலைமையிலான அமெரிக்க 12வது ஆர்மி குரூப்பும் முன்னேறின. மார்ச் 7ம் தேதி தெற்கில் முன்னேற்றம் தொடங்கியது. பத்து நாட்கள் சண்டைக்குப்பின் அமெரிக்க 1வது ஆர்மி ரெமகன் என்ற இடத்திலிருந்த லுடன்டார்ஃப் பாலத்தின் வழியாக ரைன் ஆற்றைக் கடந்து ஊடுருவி விட்டது. மார்ர் 24ம் தேதி பிளண்டர் நடவடிக்கை மூலம் வடக்கிலும் ரைன் ஆற்றை நேசநாட்டுப் படைகள் கடந்து விட்டன.

அடுத்து வடக்கிலிருந்து அமெரிக்க 9வது ஆர்மி தெற்கு தோக்கியும், தெற்கிலிருந்து அமெரிக்க 12வது ஆர்மி வடக்கு நோக்கியும் ஒரு பெரும் கிடுக்கியின் இரு கரங்களைப்போல முன்னேறத் தொடங்கின. இருபடைப்பிரிவுகளுக்கும் இடைப்பட்ட ரூர் இடைப்பகுதியில் 21 வெர்மாட் (ஜெர்மானிய தரைப்படை) டிவிசன்களைக் கொண்ட ஆர்மி குரூப் பி சிக்கிக் கொண்டது. ஐந்து வருடங்கள் இடைவிடாத போரால் கிட்டத்தட்ட அழியும் நிலையிலிருந்த ஜெர்மானிய இராணுவத்துக்குத் துணையாக முதியோர்களின் வோல்க்ஸ்ட்ரம் (”மக்கள் புயல்”) படைப்பிரிவுகளும், சிறுவர்களின் ஹிட்லர்யுகெண்டு (”ஹிடலர் இளைஞர் படை”) படைப்பிரிவுகள் இருந்தன. இந்த பலவீனமான அனுபவமற்ற படைகளால் நேசநாட்டுத் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. ஏப்ரல் 1ம் தேதி அமெரிக்கக் கிடுக்கியின் இரு கரங்களும் லிப்ஸ்டாட் அருகே கைகோர்த்தன. ரூர் இடைப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. சுமார் 4,30,000 ஜெர்மானியப் படைவீரர்கள் இப்பகுதியில் இருந்தனர்.

பிறப் படைப்பிரிவுகள் ஜெர்மனியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஏப்ரல் 12ம் தேதி, 9வது மற்றும் 12வது ஆர்மிகள் தங்களிடையே ரூர் இடைப்பகுதியைப் பிரித்துக் கொண்டு, அதிலுள்ள ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கின. மறுநாள் ரூர் இடைப்பகுதியின் கிழக்குப்பிரிவிலிருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. மேற்கிலிருந்த படைகள் ஏப்ரல் 21ம் தேதி வரை தொடர்ந்து சண்டையிட்டன. பின் அவையும் சரணடைந்தன. ஆர்மி குரூப் பி இன் தலைமைத் தளபதி ஃபீல்டு மார்ஷல் வால்டர் மோடல் அமெரிக்கர்களிடம் சரணடையாமல் தற்கொலை செய்துகொண்டார். அமெரிக்கப் படைகள் சுமார் 3,25,000 ஜெர்மானிய வீரர்களைக் கைது செய்தன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.