ரூபந்தேஹி மாவட்டம்

ரூபந்தேஹி மாவட்டம் (Rupandehi District) (நேபாளி: रुपन्देही जिल्लाகேட்க ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. ரூபந்தேஹி மாவட்டம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.

நேபாளத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தின் அமைவிடம்

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சித்தார்த்தநகர் ஆகும். இம்மாவட்டத்தின் பிற நகரங்கள் லும்பினி, தேவதகா மற்றும் பூத்வல் ஆகும். நேபாளத்தின் தராய் சமவெளியில் அமைந்த ரூபந்தேஹி மாவட்டத்தின் பரப்பளவு 1,360 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும்.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,80,196 ஆகும்.[2] நேபாள மொழி மற்றும் அவதி மொழிகள் இங்கு பேசப்படுகிறது.

பெயர்க் காரணம்

புத்தரின் தாயும், மன்னர் சுத்தோதனரின் பட்டத்து மனைவியுமான ரூபாதேவியின் நினைவாக இம்மாவட்டத்திற்கு ரூபந்தேஹி என பெயர் சூட்டப்பட்டது.[3]

வரலாறு

கௌதம புத்தரின் பிறப்பிடமான லும்பினி நகரம் மற்றும் கௌதம மற்றும் புத்தரின் தாயான மாயாதேவியின் பிறப்பிடமான தேவதகா எனும் இடமும் இம்மாவட்டத்தில் உள்ளது.

நிர்வாக பகுதிகள்

இம்மாவட்டம் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும், நாற்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களும், ஐந்து நகராட்சிகளும், ஒரு துணை-மாநகராட்சியும் கொண்டுள்ளது.[4]

நிலவியல்

நேபாளத்தின் தென்மேற்குப் பகுதியில் தராய் சமவெளியில் ரூபந்தேஹி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் நவல்பராசி மாவட்டமும், மேற்கில் கபிலவஸ்து மாவட்டமும், வடக்கில் பால்பா மாவட்டமும், தெற்கில் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 159 மீட்டர் முதல் 1,229 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,360 சதுர கிலோ மீட்டராகும்.

ஆறுகள்

இமயமலையில் உற்பத்தியாகும் பதினோறு ஆறுகள் ரூபந்தேஹி மாவட்டத்தின் வழியாக பாய்ந்து பின்னர் இந்தியாவின் கங்கை ஆற்றில் கலக்கிறது. அவைகளில் முக்கியமானது ரோகிணி ஆறு ஆகும். ரோகிணி ஆற்றின் நீரை வயல்களுக்குப் பாய்ச்சுவது தொடர்பாக கௌதம புத்தர் பிறந்த சாக்கியர்களுக்கும், ஆற்றின் எதிர் கரையில் வாழ்ந்த கோலியர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டது. இப்பிணக்கை புத்தர் தீர்த்து வைத்தார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.

தட்ப வெப்பம்

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 159 மீட்டர் முதல் 1,229 மீட்டர் உயரம் வரை உள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு காலநிலைகளில் காணப்படுகிறது. [5]

புகழ் பெற்ற தலங்கள்

லும்பினி

லும்பினி கௌதம புத்தரின் பிறந்த இடம்

இம்மாவட்டத்தில் உள்ள கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினி அனைத்துலக பௌத்தர்களுக்கும் புனித இடமாக உள்ளது. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பௌத்த சமயத்தவர்களுக்கு லும்பினி புனித யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு உறுப்பான யுனெஸ்கோ நிறுவனம் லும்பினியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1997-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. [6] [7]

தேவதகா

தேவதகா நகரம், கௌத புத்தரின் தாயான மாயா மற்றும் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் பிறந்த இடமாகும் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது. [8]

கோயில்கள்

சித்த பாபா கோயில்
  • சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சித்த பாபா கோயில் ரூபந்தேஹி மாவட்டம் மற்றும் பல்பா மாவட்டதிற்கு இடையே அமைந்துள்ளது. [9] [10]
  • சத்தியதேவி கோயில், ரோகிணி ஆற்றின் கரையில் பட்கௌலி கிராமத்தில் அமைந்துள்ளது.[11] [12]

போக்குவரத்து

சித்தார்த்தா நெடுஞ்சாலையும், மகேந்திரா நெடுஞ்சாலையும் ரூபந்தேஹி மாவட்டத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. லும்பினியில் உள்ள கௌதம புத்தா வானூர்தி நிலையம் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[13] [14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.