மு. சி. பூரணலிங்கம் பிள்ளை

மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.

மு. சி. பூரணலிங்கம் பிள்ளை
பிறப்புமே 25, 1866
முந்நீர்ப்பள்ளம், திருநெல்வேலி
இறப்புசூன் 6, 1947(1947-06-06) (அகவை 81)
பணிஆங்கிலப் பேராசிரியர்
அறியப்படுவதுதமிழறிஞர்
சமயம்சைவம்

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 இல் பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார்.

ஆங்கிலப் பேராசிரியராக பணி

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதழாசிரியராக

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.

பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

நூல்கள் இயற்றல்

பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.

தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியா" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார்.

"பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார்.

நாட்டுடமை

பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.