மாதுரி தேவி

மாதுரி தேவி (பிறப்பு: ஆகத்து 1927)[1] தமிழ்த் திரைப்பட நடிகையாவார். 1940கள்-50களில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

மாதுரி தேவி
மர்மயோகி (1951) திரைப்படத்தில் மாதுரி தேவி
பிறப்புகிளாரா
ஆகத்து 1927
ராயபுரம், சென்னை
பணிநடிகை
அறியப்படுவதுநடிகை
சமயம்கிறித்தவம்
வாழ்க்கைத்
துணை
சாந்திலால் முகர்ஜி

வாழ்க்கைக் குறிப்பு

மாதுரிதேவி சென்னை, ராயபுரத்தில் கிறித்தவக் குடும்பம் ஒன்றில் சூசை முதலியார் என்பவருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கிளாரா. வீட்டில் சந்திரா என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார்.[2] ராயபுரம் செயின்ட் அந்தோனீசு உயர்பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும் போதே திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டினார். திரைப்படப் பாடல்களைப் பாடுவது அவரது முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. இவரது ஆர்வத்தைக் கண்ட கோசலம் என்பவர் மாதுரிதேவியின் பெற்றோரின் சம்மதத்துடன் தனது சியாம்சுந்தர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.[2] மாதுரி தேவி தனது பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு, யானை வைத்தி என்பவரிடம் ஆறு மாத காலத்திற்கு கருநாடக இசைப் பயிற்சி பெற்றுக் கொண்டார். பின்னர் சங்கரலிங்க நாடார் என்பவரிடத்தில் இரண்டு ஆண்டுகளும், என். சி. வசந்தகோகிலத்திடம் ஆறு மாதங்களும் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.[2]

திரைப்படங்களில் நடிப்பு

மாதுரி தேவி நடித்த முதல் படம் பாண்டுரங்கன் என்பதாகும். இது 1939 இல் வெளிவந்தது. டி. ஏ. மதுரம் இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்திராணி என்ற வேடத்தில் மாதுரி தேவி நடித்திருந்தார். தொடர்ந்து வாயாடி (1940) திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து சந்தானலட்சுமி என்ற கதாநாயகி வேடத்தில் நடித்தார்.[2] இதற்குப் பின்னர் இவரைப் படங்களில் நடிக்க தந்தை அனுமதிக்கவில்லை. ஒரு முறை திருமழிசை ஆழ்வார் நாடகம் பார்க்க பெற்றோருடன் சென்றிருந்த போது மாதுரி தேவியைக் கண்ட டி. வி. சாரி என்பவர் பெற்றோருடன் வாதாடி தனது ஸ்ரீ லட்சுமி விஜயம் என்ற தனது படத்தில், நடிக்க ஒப்பந்தம் பெற்றுக் கொண்டார். இப்படத்தில் அமுதா, குமுதா என்ற இரட்டை வேடத்தில் மாதுரி தேவி நடித்தார்,[2] இப்படத்தில் கதாநாயகனாக பி. எஸ். கோவிந்தன் நடித்தார். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்சின் டி. ஆர். சுந்தரம் தனது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947) படத்தில் இவரை நடிக்க வைத்தார். மோகினி (1948) திரைப்படத்தில் மோகினி வேடத்தில் டி. எஸ். பாலையாவுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் இவர் "ஆடு பேயே" என்ற பாடலுக்கு மோகினி ஆட்டம் ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார். அடுத்து கன்னியின் காதலி படத்தில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா ஆகிய மூன்று வேடங்களில் நடித்தார்.[2] இதற்குப் பின்னர் பொன்முடி (1950) திரைப்படத்தில் பி. வி. நரசிம்மபாரதியுடன் இணைந்து இவர் நடித்த நெருங்கிய காதற்காட்சிகள் அக்காலத்து இரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.[3]

குடும்பம்

மாதுரி தேவி அவரது தந்தையின் வங்காள நண்பரின் மகனும், சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான சாந்திலால் முகர்ஜி என்பவரை 1944 மார்ச் 2 இல் திருமணம் புரிந்து கொண்டார்.[2] முகர்ஜி மாதுரி தேவி நடித்த ரோஹிணி (1953) என்ற படத்தைத் தயாரித்தார். அத்துடன் மாதுரி தேவியின் தயாரிப்பில் வெளியான மாலா ஒரு மங்கல விளக்கு (1959) என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. வாயாடி (1940)
  2. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)
  3. மோகினி (1948)
  4. ஸ்ரீ லட்சுமி விஜயம் (1948)
  5. கன்னியின் காதலி (1949)
  6. பொன்முடி (1950)
  7. மந்திரி குமாரி (1950)
  8. ராஜாம்பாள் (1951)
  9. தேவகி (1951)
  10. தேவகி (1951)
  11. மர்மயோகி (1951)
  12. வேலைக்காரன் (1952)
  13. குமாரி (1952)
  14. என் தங்கை (1952) - எம். ஜி. ஆரின் மனைவியாக நடித்திருந்தார்.
  15. மாணாவதி (1952)
  16. பசியின் கொடுமை (1952)
  17. தாய் உள்ளம் (1952)
  18. ஜமீந்தார் (1952)
  19. ரோஹிணி (1953)
  20. ஆசை அண்ணா அருமை தம்பி (1955)
  21. நல்ல தங்கை (1955)
  22. ஒன்றே குலம் (1956)
  23. மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
  24. அதிசயப் பெண் (1959)
  25. தோழன் (1960)
  26. வெற்றித் திருமகன் (1978)

மேற்கோள்கள்

  1. குண்டூசி. ஆகத்து 1951.
  2. ஸினி பென் (சூலை 1951). ""ஆண் வேஷ அழகி" மாதுரி தேவி". பேசும் படம்: பக். 14-26.
  3. ராண்டார் கை (4 அக்டோபர் 2008). "Ponmudi 1950". தி இந்து. பார்த்த நாள் 18 செப்டம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.