பொருள் இலக்கணம்

வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்றுஎடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

அகப்பொருள் இலக்கணம்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணை தலைவன் என்றும் பெண்ணை தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மையைக் கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் உரையாடுவது போன்ற பாடல்களும் கலித்தொகையில் உண்டு.[1] ஒவ்வொரு பாடலுக்கும் பிற்காலத்தில் திணை, துறை வகுத்துக் காட்டியுள்ளனர்.

அகப்பொருள் திணைகள்

  1. குறிஞ்சித்திணை
  2. முல்லைத்திணை
  3. மருதத்திணை
  4. நெய்தல்திணை
  5. பாலைத்திணை

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

  1. முதற்பொருள்
  2. கருப்பொருள்
  3. உரிப்பொருள்

ஆகியன ஆகும்.

புறப்பொருள் இலக்கணம்

புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள்அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே.

புறப்பொருள் திணைகள்

வெட்சித்திணை

பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

கரந்தைத்திணை

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

வஞ்சித்திணை

பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்தநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

காஞ்சித்திணை

படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித்திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

நொச்சித்திணை

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித்திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச்செல்வான்.

உழிஞைத்திணை

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத்திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

தும்பைத்திணை

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத்திணை எனப்படும்.தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

இந்தத் திணைகளுடன் வாகைத்திணை, பாடாண்திணை, பொதுவியல்திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன. இவற்றையும் சேர்த்து, பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து, பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர்.

வாகைத்திணை

போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்துபாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

பாடாண்திணை

இதுவரை சொன்ன புறத்திணைகள் போர்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண்திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவைஇடம்பெறும்.

பொதுவியல்

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

கைக்கிளை

தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத்திணை எனப்படும். இதை ஒருதலைக் காதல் என்று கூறுவர்.

பெருந்திணை

தன்னை விட வயதில் மிகவும் இளைய பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும்.இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர்.

கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.

காண்க

அடிக்குறிப்பு

  1. கலித்தொகை 104, 105
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.