நொச்சித் திணை

நொச்சிப்படலம்

மதிலை வளைத்துப் போர் செய்யும் உழிஞைத் திணை வீரர்கள் மதிலுள் புகாமல் தடுத்துப் போரிடுபவர். நொச்சித் திணை வீரராவர். இவர்கள் சிந்துவாரம் என்றறியப்படும் நொச்சிப் பூமாலையைச் சூடிப் போர் செய்வர்.

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ;எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

நொச்சி திணை மற்றும் துறைகள்

நொச்சி திணை மற்றும் துறைகளை புறப்பொருள் வெண்பாமாலை சூத்திரம் பின்வருமாறு தொகுத்தளிக்கிறது:

நுவல் அருங் காப்பின் நொச்சி, ஏனை
மறனுடைப் பாசி1, ஊர்ச்செரு என்றா2,
செருவிடை வீழ்தல்3, திண் பரிமறனே4,
எயிலது போரே5, எயில்தனை அழித்தல்6,
அழிபடை தாங்கல்7, மகள்மறுத்து மொழிதல்8, என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும், துறையும் ஆகும்.


இப்பாடல் கூறுவது, "நொச்சி" என்பது திணை என்றும், பின்வரும் எட்டும் நொச்சியின் துறைகள்:

  1. மறனுடைப் பாசி
  2. ஊர்ச்செருதல்
  3. செருவிடை வீழ்தல்
  4. குதிரை மறம்
  5. எயிலது போர்
  6. எயில்தனை அழித்தல்
  7. அழிபடை தாங்கல்
  8. மகள்மறுத்து மொழிதல்

மறனுடைப் பாசி

உழிஞை வீரரோடு போரிடும் வேளையில் வீரமரணம் அடைந்து சுவர்க்கம் அடைவதினைக்குறிக்கும் திணை.

ஊர்ச்செருதல்

மதிலைச்சுற்றி அகழிகள் மதிலைப்பிடிக்க வரும் வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக அமைந்திருக்கும். எனவே, இவ்வகழிகளை உழிஞை வீரர்கள் அழிக்காது போரிடுவதைக்குறிக்கும் திணை.

செருவிடை வீழ்தல்

அகழிகளைக்காக்கும் நொச்சி வீரர்கள் உழிஞை வீரரோடு போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் திணை.

குதிரை மறம்

மதிலைக்காக்க வேண்டி பெரிய மதில்களின் மீது பாய்ந்தோடும் குதிரையின் (பரி) திரத்தைக்கூறும் திணை.

எயிலது போர்

எயில் என்பது மதிலைக்குறிக்கும். இத்திணை மதில் மீதிருந்து உழிஞை வீரர்களோடு போரிடுவதைக்குறிக்கும் திணை.

எயில்தனை அழித்தல்

மதிலைக்காக்கும் வீரர்கள் வீரமரணம் அடைந்து வானிலிருந்து தேவமகளிர் வந்து அவர்களை அழைத்து செல்வதனை குறிக்கும் திணை.

அழிபடை தாங்கல்

மதிலின் மீது கூட்டமாக வீரர்கள் இல்லாவிடினும் ஒவ்வொரு நொச்சி வீரரும் தனியே நின்று உழிஞை வீரரோடு போரிடும் பெருந்திறத்தை உரைக்கும் திணை.

மகள்மறுத்து மொழிதல்

மதிலை சுற்றியும் தன் உழிஞை வீரப்படைகளை நிறுத்திய மன்னர், நொச்சி வேந்தரின் மகளை மணமுடிக்க வேண்டுதலும், அதனை நொச்சி மன்னர் ஏற்க மறுத்தலையும் விளக்கும் திணை.


புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.