முதற்பொருள் (இலக்கணம்)

தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். "நிலம்" என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், "காலம்" என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்[1].

நிலம்

தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. இவற்றுள்,

  1. மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்படும்.
  2. காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை எனப்படும்.
  3. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனப்படும்
  4. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும்.
  5. மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை எனப்படும்.

காலம்

காலம் அல்லது பொழுதை பெரும் பொழுது, சிறு பொழுது என இரண்டு பெரும் பிரிவுகளாகத் தமிழ் இலக்கணம் வகுத்து உள்ளது.


  • பெரும்பொழுது: பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு.ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள்(மாதம்) கால அளவுடையது.கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் என அறுவகை.


காலம் - திங்கள்
கார் - ஆவணி,புரட்டாசி
கூதிர் - ஐப்பசி,கார்த்திகை
முன்பனி - மார்கழி,தை
பின்பனி - மாசி,பங்குனி
இளவேனில் - சித்திரை,வைகாசி
முதுவேனில் - ஆனி,ஆடி


  • சிறு பொழுது: மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் என்பன.


மாலை - கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகுதி
யாமம் - நள்ளிரவு.இரவுப்பொழுதின் நடுப்பகுதி
வைகறை - கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப்பொழுதின் இறுதிப்பகுதி
காலை - கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி;விடியற்காலம்
நண்பகல் - பகற்பொழுதின் நடுப்பகுதி
எற்பாடு - பகற்பொழுதின் இறுதிப்பகுதி ,கதிரவன் மறைகின்ற காலம்
சிறுபொழுது நேரம்
காலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை
நண்பகல் 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
எற்பாடு 2.00 மணிமுதல் 6.00 மணிவரை
மாலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை
யாமம் 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
வைகறை 2.00 மணிமுதல் 6.00 மணிவரை

திணையும் காலமும்

நிலத்திணையின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு திணைக்கும் அவற்றுக்கு உரிய காலங்கள் உள்ளன.

  • முல்லைத் திணை: கார்காலமும் மாலைப் பொழுதும்
  • குறிஞ்சித் திணை: கூதிர் காலமும் யாமப் பொழுதும்
  • மருதத் திணை: வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்
  • நெய்தல் திணை: பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்
  • பாலைத் திணை: நண்பகலும் வேனிற் காலமும்

குறிப்புகள்

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, பக். 1

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.