புனித தெரேசா ஆலயம், பெரம்பூர்

தமிழகத்தின் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் உள்ள புனித தெரேசா ஆலயம்,[1] பெரம்பூர் செம்பியம் பகுதியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. சுமார் 900 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் குழந்தை இயேசுவை நாடித் திருப்பயணமாக இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். குழந்தை இயேசு மற்றும் புனித தெரேசாவின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக இவர்கள் நம்புகின்றனர்.

புனித தெரேசா ஆலயம், பெரம்பூர்
ஆலய முகப்பு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெரம்பூர்,
புவியியல் ஆள்கூறுகள்13.122191°N 80.240214°E / 13.122191; 80.240214
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
மண்டலம்கிறித்தவம்
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மாநகராட்சிசென்னை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு2001 (ஆகஸ்ட் 15)
நிலைஆலயம்
செயற்பாட்டு நிலைநடப்பில் உள்ளது
இணையத்
தளம்
St.Theresa Church, Perambur
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிநவீனம்
அளவுகள்

புனித தெரேசா

பெரம்பூர் செம்பியம் ஆலய பங்கு மக்களின் பாதுகாவலராக இருப்பவர் புனித தெரேசா. இவர் குழந்தை இயேசுவின் புனித தெரேசா என்று அறியப்படுகிறார். இவர் பிரான்ஸ் நாட்டின் அலன்சோன் நகரில் 1873 ஜனவரி 2 அன்று பிறந்தார்; 1897 செப்டம்பர் 30 அன்று இறந்தார். தனது 15ஆம் வயதில் திருத்தந்தை 13ம் லியோவின் சிறப்பு சலுகையால், கார்மேல் மடத்தில் சேர அனுமதி பெற்றார். 1888 ஏப்ரல் 9 அன்று, லிசியே நகர் துறவற இல்லத்தில் நுழைந்தார். 11 ஆண்டுகளாக அருள் வாழ்வில் நிலைத்து, புனிதத்தில் வளர்ந்து, இவர் வாழ்ந்த துறவற வாழ்வு பற்றிய தகவல்கள் தெரேசா எழுதிய 'ஓர் ஆன்மாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. அன்பு, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், இயேசுவுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்ற எளிய வழியில் தெரேசா புனித வாழ்வு வாழ்ந்தார். தெரேசாவின் பரிந்துரையால் பல்வேறு அற்புதங்கள் நடைபெற்றதால், இவரைப் புனிதராக அறிவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1925 மே 17 அன்று, திருத்தந்தை 11ம் பயஸ் தெரெசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித தெரேசா மறைபரப்பு பணிக்கும், பூக்காரர்கள், தீராத நோயாளிகள் ஆகியோருக்கும் பாதுகாவலராக விளங்குகிறார். 1997 அக்டோபர் 19ந்தேதி, திருத்தந்தை 2ம் ஜான் பால் புனித தெரேசாவை அகில உலகத் திருச்சபையின் மறைவல்லுநராக அறிவித்தார்.

ஆலய வரலாறு

ஆசீர்வாத கோபுரம்

பெரம்பூர் தூய லூர்தன்னை திருத்தலப் பங்கின் கீழ் வாழ்ந்த மடுமாநகர் மக்கள், 1967ஆம் ஆண்டு தங்கள் பகுதியில் புனித தெரேசாவின் பெயரால் ஆலயம் ஒன்றை எழுப்பினர். 1994ல் தூய லூர்து அன்னை பங்கில் இருந்து மடுமாநகர் பிரிக்கப்பட்டு, சலேசிய அருட்தந்தை பேசில் தலைமையில் தனிப் பங்காக உருவானது.[2] தொடக்கத்தில் இப்பங்கில் 400 குடும்பங்கள் இருந்தன. மடுமாநகர் ஆலயத்தில் போதுமான அளவு இடவசதி இல்லாத காரணத்தால், கூடுதல் வசதிகளுடன் புதிய ஆலயம் கட்ட அருட்தந்தை பேசில் (1994-2003) முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சியால் செம்பியம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டு தற்போதுள்ள புதிய ஆலயம் எழுப்பப்பட்டது. 2001 ஆகஸ்ட் 15 அன்று சென்னை-மயிலை பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள் ஆலயத்தை புனிதப்படுத்தி திறந்துவைத்தார். சிறிது காலத்தில் இந்த பங்கு உயர்மறைமாவட்டத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. பங்கில் பொறுப்பேற்ற முதல் மறைமாவட்ட குருவான அருட்தந்தை இனிகோ (2003-2010), 2003ல் குருவானவர் இல்லக் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ததுடன், ஆலய வளாகத்தில் தூய லூர்து அன்னை கெபியையும் கட்டினார்;[3] 2006ஆம் ஆண்டு, பிரேகு நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட குழந்தை இயேசு சொரூபத்தை நிறுவி, குழந்தை இயேசு பக்திமுயற்சியைத் தொடங்கிவைத்தார்; 2008ல் ஆலய வளாக முகப்பில் ஆசீர்வாத கோபுரத்தைக் கட்டி எழுப்பினார். 2011ல் அருட்தந்தை மேத்யூ (2010-2011), குருக்களுக்கான விருந்தினர் இல்லத்தை உருவாக்கினார். அருட்தந்தை ஸ்டீபன் (2011-2013), ஆலய உள் அமைப்பை கலை வேலைப்பாடுகள் நிறைந்ததாக மாற்றி அமைத்தார்.

சிறப்பு நிகழ்வுகள்

மாதத்தின் முதல் நாள்: புனித தெரேசாவின் மாத நினைவு நாளான இது, மாலையில் புனித தெரேசாவின் நவநாள் செபங்களுடன் திருப்பலி சிறப்பிக்கப்படுகிறது.

வியாழக்கிழமைகள்: குழந்தை இயேசுவின் நாளான இது, மாலையில் செபமாலை, திருப்பலி மற்றும் எண்ணெய் வழிபாட்டோடு சிறப்பிக்கப்படுகிறது.

முதல் வெள்ளிக்கிழமைகள்: இயேசுவின் திருஇதயத்தின் நாளான இது, மாலையில் செபமாலை, திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனையோடு சிறப்பிக்கப்படுகிறது.

முதல் சனிக்கிழமைகள்: அன்னை மரியாவின் நாளான இது, மாலையில் செபமாலை மற்றும் திருப்பலியோடு சிறப்பிக்கப்படுகிறது.

மாதத்தின் 24ந்தேதி: கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் நினைவு நாளான இது, மாலையில் செபமாலை மற்றும் திருப்பலியோடு சிறப்பிக்கப்படுகிறது.

ஆலயத் திருவிழா: புனித தெரேசாவின் திருவிழா அக்டோபர் முதல் ஞாயிறன்று பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒன்பது நாட்கள் முன்பாக தொடங்கும் திருவிழா, தினமும் மாலையில் புனித தெரேசாவின் நவநாள் செபங்கள் மற்றும் திருப்பலியுடன் சிறப்பிக்கப்படுகிறது.

நிழற்படத் தொகுப்பு

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.