பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை

பாண்டியகுல சத்ரிய நாடார் உறவின்முறை என்பது, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நாடார் சமுதாய மக்களினால் 1856ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.

வரலாறு

16ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாடார் சமுதாய மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களுள் சிலர் போராடியும், தப்பித்தும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம் (மதுரை), பாலையம்பட்டி ஆகிய 6 ஊர்களில் தஞ்சம் புகுந்தனர். தஞ்சமடைந்த ஊர்களிலும் பிற சமூக மக்களால் தாழ்த்தப்படுத்தப்பட்டனர். ஆகவே அவர்களுக்கென்று தனித்தனி அறக்கட்டளைகளை நிறுவினர். அவ்வாறு திருமங்கலத்து நாடார் இன மக்கள் 1856ம் ஆண்டு தொடங்கியதே இவ்வறக்கட்டளையாகும். இவ்வறக்கட்டளையின் கீழ் மகமை (வரி) வசூலித்து, பொதுக் கோயில் ஒன்றும், வணிகத்திற்கு கடை வீதிகளும், கல்வி நிறுவனங்களும் நிறுவினர்.

வாழ்க்கைமுறை

திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வளாகம்

தமிழகத்தின் பிற ஊர்களில் வாழும் நாடார் இன மக்களுக்கும், திருமங்கலத்தில் வாழும் இவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. மற்ற சாதி மக்களிடமிருந்து தங்கள் சமூக மக்களைக் காப்பாற்ற 6 மற்றும் 7 குடும்பங்கள் என ஒன்றாக கூட்டு (காம்பவுண்ட்) வீடுகள் அமைத்து வாழ்ந்தனர். இன்றும் ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட கூட்டு வீடுகள் உயிர்ப்புடன் உள்ளது. வெவ்வேறு கொத்துவழிகளைச் சேர்ந்த இவர்களுக்கென்று ஊர் மத்தியில், குண்டாற்றின் கரையில் பத்திரகாளி மாரியம்மன் கோவில் ஒன்றை நிறுவினர். தங்கள் சமூக மக்களிடம் மகமை வசூலித்து, இக்கோயிலில் வைகாசி மாதம் திருவிழா நடத்துகின்றனர். அத்திருவிழாவின் கடைசி நாளில் அம்மன் குண்டாற்றில் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருமங்கலத்தைச் சுற்றியுள்ள மக்கள் சாதி பேதம் பாராது அனைவரும் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபடுகின்றனர். மேலும் தங்கள் சமூக ஆண்கள் குளிப்பதற்காக திருமங்கலம் குண்டாறு மற்றும் சிங்காற்றின் நடுவில் ஒரு ஊற்று அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தை ஊத்துமேடு என்றழைப்பர்.

கூட்டு வீடுகள்

ஒரு கூட்டு வீட்டிற்குள் குறைந்தது 10 வீடுகள் இருக்கும். எல்லா கூட்டு வீட்டிற்கும் நடுவில் சிறு மேடை போன்ற ஒரு சவுக்கை தவறாமல் இருக்கும். இந்த சவுக்கையில் தான், இந்த 10 வீடுகளில் நடக்கும் எல்லா சுப மற்றும் துக்க காரியங்கள் நடக்கும். அதற்கு பின்புறம், நெல் மற்றும் தானிய வகைகளை உலர்த்த ஒரு முற்றமும் (தாழ்வாரம்) இருக்கும். இங்கிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் முற்றத்தின் பின்புறம், சமையலறை மற்றும் மாட்டுத்தொழுவம் தனித்தனியாகவும் வரிசையாகவும் அமைந்திருக்கும். மாட்டுத்தொழுவத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக பத்தி பிரித்து, மாடுகளுக்கு உணவிட கழனித் தொட்டி மற்றும் கழிவுகளை சேமிக்க கழிவுக்குழி ஒன்றும் இருக்கும். இந்தக் கழிவுக் குழியில் தான் மாட்டின் சாணத்தையும் போடுவர். வீட்டுப் ஆண்கள் அனைவரும் ஊத்துமேட்டில் குளிப்பர்.

தொழில்

இச்சமூகத்தினரின் முக்கிய தொழிலே வாணிபம் தான். வணிகம் செய்வதற்காக பெரியகடை வீதி மற்றும் சின்னக்கடை வீதி என இரண்டு வீதிகள் அமைக்கப்பட்டது. மொத்த விலைக்கடைகள் அனைத்தும் பெரியகடை வீதியிலும், சிறு மற்றும் சில்லறை விலைக்கடைகள் அனைத்தும் சின்னக்கடை வீதியில் தொடங்கப்பட்டது. திருமங்கலம் கடைவீதிகளில் பொருள் வாங்குவதற்கு சுத்துப்பட்டியிலிருந்து சுமார் 300 கிராமங்களிலிருந்து வாங்கவருவார்கள். ஆனால் இப்போது தொழில்கள் முடங்கியும், சிலர் சின்னக்கடை வீதியிலும், வேறு சிலர் மதுரை மற்றும் திண்டுக்கல்லிற்கு மாறியும் சென்றுவிட்டனர்.

பண்பாடு மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள்

தர்மகர்த்தா, நாட்டாண்மை மற்றும் காரியக்காரர்கள்

வெவ்வேறு பங்காளிகளின் கொத்துவழிவந்த திருமங்கலத்து நாடார்களுள், பத்திரகாளி மாாியம்மன் கோயில் கட்ட இடம் அளித்த நல்லதம்பி நாடாரை முதல் நாட்டாண்மையாகவும், உறவின்முறைக்குத் தேவையான் பொருட்கள் வழங்கிய ராக்கி நாடாரை இரண்டாவது நாட்டாண்மையாகவும், கோயில் வரவு செலவு கணக்குகளை திறம்பட பார்த்தமைக்காக பொன்னுலிங்க நாடாரை மூன்றாவது நாட்டாண்மையாகவும் நியமித்தனர். ஏனைய 13 கொத்துவழிப் பங்காளிகளை காரியக்காரர்களாகவும் ஆக்கினர். இப்போதும் நியமிக்கப்படும், நாட்டாண்மை மற்றும் காரியக்காரர்கள் அனைவரும் முதன்முதலில் பதவியேற்றோர்களின் பெயரிலேயே நியமிக்கப்படுவர். கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இவர்கள் மூலமாகவே நடக்கும்.

குலதெய்வ வழிபாடு

பொதுவான தெய்வத்தை மட்டும் கும்பிடாமல், தங்கள் கொத்துவழியில் வாழ்ந்த அண்ணன் மற்றும் தங்கைகளை குலதெய்வமாக கும்பிட்டு வருகின்றனர். இங்குள்ள 13 பங்காளிகளின் வழிவந்தோருக்கும் திருமங்கலத்திலேயே குலதெய்வம் உள்ளது. ஆண் தெய்வத்தை மகா சிவராத்திரியன்றும், பெண் தெய்வத்தை ஆடி மாதங்களிலும் கும்பிடுவது வழக்கம். ஆண் தெய்வம் இருக்கும் கோயிலை மாலக்கேயில் என்றும், பெண் தெய்வம் இருக்கும் கோயிலை மாதாக் கோயில் என்றும் அழைப்பர்.

திருமண முறை

திருமங்கலத்தை விட்டு வெளி்யூரில் பெண் எடுப்பதோ, கொடுப்பதோ இவர்கள் வழக்கத்தில் கிடையாது. திருமங்கலத்துக்குள்ளேயே பெண் எடுத்தும், கொடுத்தும் கொண்டனர். அவ்வாறு நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு முதலில் மணப்பெண்ணிற்கு பூ வைத்தல் எனும் சடங்கு நிகழ்ச்சி நடக்கும். மாப்பிள்ளையின் சகோதரிகள், மணப்பெண்ணிற்கு பூச்சூட்டி பெண்ணை நிச்சயம் செய்து கொள்வர். இந்நிகழ்ச்சியன்றே திருமண நாளும் குறிக்கப்படும். இதன்மூலம் இந்தப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, திருமணத்திற்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வர். திருமணம் பெண்வீட்டில் தான் நடக்கும், திருமணத்திற்காண பட்டுச் சேலையும், தாலியும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுத்துக் கொடுப்பர். வரதட்சனை கொடுப்பதும் வாங்குவதும் தங்கள் சாதிக்கே இழுக்கானதாகக் கருதினர்.

முதல் நாள்

மணமகனின் சுற்றமும் பந்தமும், திருமணத்திற்கு முந்தய நாள் மாலை பெண் வீட்டிற்குச் சென்று நிச்சயத் தாம்பூலம் மாற்றி நிச்சயித்துக் கொள்வர்.

இரண்டாம் நாள்

திருமண நாளன்று காலை, மூன்று நாட்டாண்மைகளுள் ஒருவரின் தலைமையில், அவர் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடக்கும். திருமணமும், கூட்டு வீடுகளின் சவுக்கையில் தான் நடக்கும். அன்றிரவு மணப்பெண் வீட்டிலேயே சாந்தியங்களும் சடங்குகளும் நடக்கும்.

மூன்றாம் நாள்

திருமணத்தின் மறுநாள், சம்பந்தச் சாப்பாடு என்று சொல்லப்படும் கறி விருந்து பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படும்.

வளைகாப்பு

இச்சமூகத்தைப் பொறுத்தவரை, வளைகாப்பு என்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பெண் கர்ப்பமாகி 7 மாதங்கள் நிறைவடைந்தவுடன் பெண் வீட்டிலிருந்து இரண்டு/ மூன்று பேர் வந்து, பாக்கு வெற்றிலை கொடுத்து பெண்ணைக் கூட்டிச் செல்வர். பெண்ணைக் கூட்டிச் செல்ல வருவோருக்கு மாப்பிள்ளை வீட்டார் சாப்பாடு போடுவர்.

மேலப்பேட்டைகள்

திருமங்கலத்திலிருந்து வணிகத்திற்காக பல்வேறு ஊர்களில் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்து சென்ற ஊரிலும் குழுவாக இருந்து மேலப்பேட்டைகள் அமைத்து, மகமை வசூலித்து வாழ்ந்து வருகின்றனர்.

  • மதுரை மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை
  • திண்டுக்கல் மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை
  • செக்காணுரனி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை
  • சென்னை மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை
  • தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை

கல்வி நிறுவனங்கள்

திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள கு.காமராசரின் திருவுருவச் சிலை

அப்போதய திருமங்கலத்தின் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு வாழ்ந்த நாடார் இன மக்கள், 1909ம் ஆண்டு பாண்டியகுல சத்திரிய நாடார் வித்யாசாலா என்ற கல்வி அறக்கட்டளையை நிறுவி, திருமங்கலம் நகரின் முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினர். இவ்வறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் கீழ்வருமாறு.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Official website of Tamil Nadu School Education Department". Government of Tamil Nadu. பார்த்த நாள் 11 August 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.