பனித் தகர்வு

பனித் தகர்வு (Ice calving) அல்லது பனியாற்றுத் தகர்வு அல்லது பனிமலைத் தகர்வு அல்லது பனியடுக்குத் தகர்வு என்பது பனியாறு, பனியடுக்கு, பனிமலை போன்றவற்றில் உள்ள பனித் திணிவில் திடீரென ஏற்படும் சீர்குலைவினால், ஒரு பகுதி திணிவு தகர்ந்து அல்லது உடைந்து நகர்தலாகும். அவ்வாறு நகரும் பனித்திணிவு பனிமலை என்றோ, அல்லது நகரும் பனித்திணிவின் அளவிற்கேற்ப, வேறு சில பெயர்கள் கொண்டோ அழைக்கப்படும். பனிப்பாறைப் பிளவும் (Crevasse) பனித் தகர்விற்கான ஒரு மூலமாகும்.

Perito Moreno பனியாற்றில் ஏற்பட்ட பனித் தகர்வைக் காட்டும் படம்
ஒரு பனிமலை பனித் தகர்வுக்கு உட்பட்டு, இரு கிட்டத்தட்ட சமமான பகுதிகளாகப் பிரிந்துள்ளது.

பனியாற்றில் இவ்வகையான பனித் தகர்வு நிகழும்போது, 200 அடிவரை உயரமான பெரிய பனித்திணிவானது தளர்ந்து விலகி நீரில் மோதுவதற்கு முன்னர், உடையும் பெரிய சத்தம் கேட்கும்[1]. அப்படி பெரிய பனித்திணிவுகள் நீரில் விழுந்து மோதும்போது ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலைகளைக் கொண்டிருக்கும்[2]. Johns Hopkins பனியாறு போன்ற இடங்களில் நிகழும் பனித் தகர்வுகளினால், படகு போன்றன, நிகழும் இடத்திலிருந்து 2 மைல்களுக்கு அண்மையாக போக முடியாதிருக்கும். இவ்வகையான பனித் தகர்வு நிகழும் அலாஸ்கா போன்ற இடங்கள் சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக உள்ளன.

பல பனியாறுகள் பனித் தகர்வு மூலம் அதிகளவிலான பனிமலைகளை உருவாக்கி பெருங்கடலிலோ அல்லது இயற்கையாக உருவாகும் நன்னீர் ஏரிகளிலோ சென்று சேரும்[3]. கிரீன்லாந்தில் உள்ள பனியாறுகள் ஒவ்வொரு ஆண்டும் 12,000 தொடக்கம் 15,000 வரையான பனிமலைகளை பனித் தகர்வு மூலம் உருவாக்குகின்றன[4].

பனியடுக்குகளில் பனித் தகர்வு ஏற்பட முன்னர் பொதுவாக ஒரு பிளவு நிகழும்[5]. இது அடிக்கடி அவதானிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்

  1. Glacier Bay, National Park Service. Retrieved July 2009.
  2. Glacier Calving photos. Retrieved July 2009.
  3. ARCTIC, Vol. 39, No. 1 (March 1986) P. 15-19, Ice Island Calvings and Ice Shelf Changes, Milne Ice Shelf and Ayles Ice Shelf, Ellesmere Island, N.W.T., Martin O. Jeffries, 1985, University of Calgary. Retrieved 18 July 2009.
  4. Oceans, Oxfam. Retrieved June 2009.
  5. Promotions/Public Relations (2006-12-08). "The loose tooth: rifting and calving of the Amery Ice Shelf - Australian Antarctic Division". Aad.gov.au. பார்த்த நாள் 2010-07-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.