நம்பிக்கை

நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் "நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஒருவரின் அல்லது ஒன்றின் மிகுந்தப் பற்றாலும் கூடிய விருப்பினாலும் ஏற்படும் உளம் சார்ந்த வெளிபாடாகவெ இருக்கும். அதனாலேயே ஒருவர் கொண்ட நம்பிக்கையினை இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்பு கேள்விக்குள்ளாக்கும் போது அதன் சரி பிழைகளை ஏற்கும் அல்லது பகுத்துப் பார்க்கும் மனநிலையை அநேகமான மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். மாறாக கேள்விக்குள்ளாக்கும் நபர் அல்லது அமைப்பின் மீது வன்மமாக எதிர்க்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

நம்பிக்கைகள்

மனித மனங்களில் ஏற்படும் நம்பிக்கைகள் பலவாறாக இருக்கின்றன. அவை அவரவர் பிறக்கும், வளரும், வாழும், சூழல் மற்றும் சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து ஏற்படுகின்றன. ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை இன்னொருவருக்கு மூடநம்பிக்கையாகவும், தான் நம்பும் நம்பிக்கையே உண்மையானதானகவும் நினைக்கும் அல்லது கருதும் நிலையில் மனித மனங்கள் உந்தப்படுகின்றன.

குழந்தையின் நம்பிக்கை

பிறந்த ஒரு குழந்தை தனது பெற்றோர் மற்றும் உறவினர் கொண்டுள்ள நம்பிக்கைகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அதனையே உண்மையென நம்பும் நிலையில் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்கின்றன. அநேகமாக மதம் சார்ந்த நம்பிக்கைகள் அவ்வாறான சூழ்நிலையிலேயே தோற்றம் பெறுகின்றன. இது ஆழ்மனபதிவின் வெளிபாடாகும். அதேவேளை ஓரளவு வளர்ந்த ஒரு குழந்தை தான் வாழும் சூழல் அல்லது சூழல் மாறும் நிலையைப் பொறுத்து தனது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளலும் இடம்பெறுவதுண்டு.

பகுத்தறிவு நம்பிக்கை

பட்டறிவாலும், கற்றுத் தெளிவதாலும் நம்பிக்கைகளைப் பகுத்து அறியும் மனிதர்கள் பகுத்தறிவாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் பகுத்தறிவாளர்கள் கொண்டுள்ள பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும்.

உசாத்துணை

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.