நடுவர் முடிவு மீளாய்வு முறைமை

நடுவர் முடிவு மீளாய்வு முறைமை (Umpire Decision Review System, சுருக்கமாக UDRS அல்லது DRS) துடுப்பாட்ட விளையாட்டில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வரும் ஓர் தொழில்நுட்பம் சார்ந்த முறைமையாகும். இது முதலில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓர் மட்டையாளரை ஆட்டமிழந்தவராக (அல்லது இழக்காதவராக) ஆடுகளத்தில் உள்ள நடுவர் எடுக்கும் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும்போது அவற்றை மீளாய்வு செய்வதே இம்முறைமையின் சீரிய நோக்கமாகும். இந்தப் புது முறைமையை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 24 நவம்பர் 2009ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கும் பாக்கித்தானிற்கும் இடையே டுனெடின் நகர பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த முதல் தேர்வின்போது அலுவல்முறையில் அறிமுகப்படுத்தியது.[1][2] ஒருநாள் துடுப்பாட்டத்தில் சனவரி 2011யில் இங்கிலாந்திற்கும் ஆத்திரேலியாவிற்குமான தொடரில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது.[3]

முறைமை

ஐசிசியின் முழுமையான ஆவணம்.

  • ஒவ்வொரு அணிக்கும் ஓர் ஆட்டத்தின் நடப்பில் இரு முறையீடுகள் வழங்கப்படுகின்றன; அவர்களது முறையீடு வெற்றியடையவில்லை என்றால் மட்டுமே இந்த எண்ணிக்கைக் குறைக்கப்படும். அணியின் முறையீடு வெற்றியடைந்தால் தங்கள் முறையீடு எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
  • களத்தடுப்பில் ஈடுபட்டுள்ள அணி "ஆட்டமிழக்கவில்லை" என்ற முடிவையும் துடுப்பாடும் அணி "ஆட்டமிழப்பு" முடிவையும் எதிர்க்கலாம். களத்தடுப்பிலுள்ள அணித்தலைவரோ ஆட்டமிழக்கும் மட்டையாளரோ இந்த எதிர்முறையீட்டை தங்கள் கைகளினால் "T" சமிக்ஞை செய்து பதியலாம்.
  • எதிர்முறையீடு இவ்வாறு பதியப்பட்டு,ஏற்றுக்கொள்ளப்பட்டபின் மூன்றாவது நடுவர் விளையாடியதை மீள் ஆய்வு செய்வார்.
  • கள நடுவர்கள் சில நேரங்களில் சிக்கலான முடிவுகள் எடுக்கப்படும்போது மூன்றாம் நடுவரின் துணையை நாடுவதுண்டு. இவை பெரும்பாலும் வரையறைக் கோடுகளைக் குறித்ததாகவோ (ரன் அவுட் அல்லது ஸ்டம்பிங்) எல்லைக்கோட்டைக் குறித்ததாகவோ (ஆறா அல்லது நாலா, களதடுப்பாளர் பந்தை கோட்டில் படாது தடுத்தாரா அல்லது பிடித்தாரா போன்றவை) இருக்கும். இவைஅணிகளின் எதிர்முறையீடு கணக்கில் சேராது.
  • ஆனால் எதிர் முறையீடுகள் ஓர் ஆட்டமிழப்பைக் குறித்ததாகவே இருக்கும். காட்டாக, பந்து பிடிபட்டது விதிப்படியானதா (மட்டை அல்லது கையுறைகளில் பட்டதா, பிடிக்குமுன்னரே பந்து தரையில் பட்டதா) குச்சத்தை கால் மறைத்து ஆட்டமிழப்பில் நிபந்தைகள் பூர்த்தியானதா (பந்து தரையில் குச்சத்திற்கு நேராக அல்லது வலப்புறம் விழுந்ததா, மட்டையாளரின் கால்களில் குச்சத்தை நோக்கிய நேர்கோட்டில் பட்டதா) என்பன போன்றவை.
  • மூன்றாம் நடுவர் களநடுவர்களுக்கு தனது ஆய்வின்படி அவர்களது முடிவை சரியானதாகவோ தவறாகவோ அல்லது முடிவெடுக்க இயலாததாகவோ அறிவிக்கிறார். களத்தில் உள்ள நடுவர் இறுதி முடிவை எடுக்கிறார்.
  • சரியானதெனில் மீண்டும் உறுதிசெய்யும் சமிக்ஞையை காட்டுகிறார்; தவறானதெனில் மாற்றப்படுவதற்கான சமிக்ஞையை காட்டி பின்னர் சரியான சமிக்ஞையைக் காட்டுகிறார்.
  • எதிர்முறையீடு செய்த அணி நடுவரின் முடிவு மாற்றப்பட்டால் தனது எதிர்ப்பு எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்கிறது.

கருத்துக்கள்

இந்த முறைமை பெரும்பாலான விளையாட்டுக்காரர்கள் மற்றும் துடுப்பாட்டப் பயிற்றுனர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் சில எதிர் கருத்துக்களும் எழுந்துள்ளன, மேற்கிந்தியத் தீவுகளின் ஜோல் கார்னர் இது ஓர் "ஏமாற்று முறைமை" என்று கூறியுள்ளார்..[4] மற்றொரு மேற்கிந்தியர் ராம்நரேஷ் சர்வான் இந்த முறைமையைத் தாம் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.[5] முன்னாள் நடுவர் டிக்கி பேர்ட்டும் கள நடுவர்களின் அதிகாரத்தை பறிப்பதாக இதனை விமரிசித்துள்ளார்.[6] இந்தியத் துடுப்பாட்ட வாரியம் இந்த முறைமையை ஏற்கவில்லை.[7]

துடுப்பாட்ட உலகக்ககிண்ணப் போட்டிகள் 2011

உலகக்கிண்ணப் போட்டிகளில் முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சின் நான்காவது பந்திலேயே இம்மீளாய்வு முறைமையின் முதல் மீளாய்வு செயலுக்கு வந்தது. சாந்தகுமாரன் சிறீசாந்த் வீசிய பந்தில் மட்டையாளர் ஆட்டமிழக்கவில்லை என்ற நடுவரின் முடிவை எதிர்த்து இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி முறையிட மீளாய்வு பந்து இடது குச்சத்தை விட்டு விலகிச்சென்றதையும் நடுவரின் முடிவையும் உறுதி செய்தது. சர்ச்சைகளில் இருந்த நடுவர் முடிவு மீளாய்வு முறைமை இவ்வாறாக உலகக்கிண்ணப்போட்டியில் முதன்முதலாக செயலாக்கப்பட்டது. இந்த முறைமை மிகத்தீவிரமாக போட்டியிடப்பட்டுவந்த இந்தியா- இங்கிலாந்து போட்டியில் பயன்படுத்தப்பட்டபோது தொலைக்காட்சி மறு இயக்கம் பந்து குச்சத்தை தாக்குவதாக காட்டியபோதும் இங்கிலாந்தின் இயன் பெல் ஆட்டமிழக்காதவராக அறிவிக்கப்பட்டது குழப்பத்தை உண்டாக்கியது. புதிய முறைமையின் விதிகளின்படி மட்டையாளர் குச்சத்திலிருந்து 2.5மீ தொலைவில் பந்தை காலால் தடுத்திருந்தால் ஆடுகள நடுவரின் முடிவே இறுதியானது ஆகும். இவ்விதிகளைக் குறித்த அறிமுகம் ஏதும் தரப்படாத நிலையில் தோனி "இது தொழில்நுட்பத்தையும் மனிதத் திறனையும் கலப்படமாக்கும் ஓர் முறைமை" என்று கருத்துரைத்தார். இதற்கு எதிர்வினையாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை, முறைமை குறித்து முழுவதும் அறிந்தபிறகே ஆட்டக்காரர்கள் கருத்துரைக்க வேண்டும் எனக் கூறியது.[8]

மேற்கோள்கள்

  1. "Decision Review System set for debut". Cricketnext.in (Nov 23, 2009). பார்த்த நாள் 2010-02-18.
  2. "Official debut for enhanced review system". Cricinfo (Nov 23, 2009). பார்த்த நாள் 2010-02-18.
  3. "Referrals to be used in Australia-England ODI series". BBC Sport (British Broadcasting Corporation). 16 சனவரி 2011. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/9361306.stm. பார்த்த நாள்: 16 சனவரி 2011.
  4. "Garner labels review system as a 'gimmick'". London: The Independent. Dec 10, 2009. http://www.independent.co.uk/sport/cricket/garner-labels-review-system-as-a-gimmick-1837578.html. பார்த்த நாள்: 2010-02-18.
  5. Weaver, Paul (Dec 6, 2009). "Sarwan unhappy with umpire review system despite reprieve". London: Guardian. http://www.guardian.co.uk/sport/2009/feb/06/cricket-england-west-indies-referral. பார்த்த நாள்: 2010-02-18.
  6. "Dickie Bird criticises review system". Cricinfo (Dec 7, 2009). பார்த்த நாள் 2010-02-18.
  7. "BCCI to oppose Umpire Decision Review System". The Nation (Nov 12, 2009). பார்த்த நாள் 2010-02-18.
  8. "UDRS, ICC World Cup 2011".

வெளியிணைப்புகள்

  • www.icc-cricket.com நடுவர் முடிவு மீளாய்வு முறைமை செயலாக்கம் குறித்த அனைத்து விளையாட்டு கட்டுப்பாடுகளும் இந்த இணையதளத்தில் காணலாம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.