தெமாகு பெரிய பள்ளிவாசல்

தெமாகு பெரிய பள்ளிவாசல் அல்லது மஸ்ஜித் அகுங் தெமாகு (Demak Great Mosque) என்பது இந்தோனேசியாவின் நடுச்சாவக மாகாணத்தின் தெமாகு நகர மையத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் மிகப் பழைய பள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசல் 15ஆம் நூற்றாண்டில், தெமாகு சுல்தானகத்தின் ஆட்சியாளரான இராடன் பத்தாகு என்பவரது ஆட்சிக் காலத்திற் சாவக மொழியில் ஏழு இறைநேசர்கள் என்ற பொருளில் வலீ சொஙோ என அழைக்கப்படுவோரில் ஒருவரான சுனன் கலிஜாகா என்பவராற் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1]

தெமாகு பெரிய பள்ளிவாசல்
அமைவிடம் தெமாகு, இந்தோனேசியா
பிரிவு/பாரம்பரியம் இஸ்லாம்
நிர்வாகம் தெமாகு அரசாங்கம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
நீளம் {{{நீளம்}}}
மினாரா(க்கள்) இல்லை

தன்மைகள்

இப்பள்ளிவாசல் பலதடவைகள் புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பினும், பெரும்பாலும் இது இன்னமும் இதன் முதலமைப்பிலேயே உள்ளதாகக் கருதப்படுகிறது.[2] இப்பள்ளிவாசல் சாவக மரபுவழிப் பள்ளிவாசற் கட்டுமானத்திற்கு ஓர் உதாரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளிற் போலன்றி, இதன் கட்டுமானம் மரப் பலகைகளினாலேயே அமைந்துள்ளது. இதன் கூரையிற் குவிமாடம் காணப்படுவதில்லை. 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தோனேசியப் பள்ளிவாசல்கள் குவிமாடமின்றியே கட்டப்பட்டன. எனவே இப்பள்ளிவாசலும் குவிமாடமில்லாமல் அடுக்கடுக்கான கூரையைக் கொண்டுள்ளது. இதன் கூரை நான்கு தேக்கு மரத் தூண்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.[3] இதன் அடுக்கடுக்கான கூரையமைப்பு பண்டைச் சாவக மற்றும் பாலிப் பண்பாடுகளிற் காணப்பட்ட இந்து-பௌத்த ஆலயங்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.

தெமாகு பெரிய பள்ளிவாசலின் முதன்மை நுழைவாயிலிற் காணப்படும் இரு கதவுகளிலும் தாவரங்கள், பூச்சட்டிகள், மணிமுடிகள், வாயை அகலத் திறந்திருக்கும் விலங்கினங்களின் தலைகள் போன்றன செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருக்கும் படங்கள் இடி முழக்கத்தைக் காட்டுவதற்காக் குறிக்கப்பட்டுள்ளனவெனக் கூறப்படுகிறது. அதனாலேயே அக்கதவுகளை “லவாங் பிளதெக்” (இடிக் கதவுகள்) என அழைக்கப்படுகின்றன.

அக்காலத்திற் கட்டப்பட்ட ஏனைய பள்ளிவாசல்களைப் போன்றே, இதன் கிப்லாவும் (அதாவது மக்காவின் புனிதப் பள்ளியை நோக்கிய திசையும்) வெறும் அனுமானமாகவே உள்ளது.[4]

தெமாகு பெரிய பள்ளிவாசலின் வரலாற்றுச் சின்னங்களைச் செதுக்குதல்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட தெமாகு பெரிய பள்ளிவாசலின் படங்கள்

இதன் சுவர்கள் வியட்நாமிய வெண்களியினால் ஆனவை. அவற்றிற் காணப்படும் சாவக மரச் செதுக்கல் மற்றும் செங்கல் வேலைகள் என்பன, அவை அவற்றுக்கெனவே சிறப்பாகக் கொள்முதல் ஆணையிடப்பட்டு அழைக்கப்பட்டவை போன்று தோற்றமளிக்கின்றன.[5] கற்களினாலன்றி, வெண்களியினாற் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பதானது, பாரசீகத்தின் பள்ளிவாசல்களுடன் ஒப்பிடக்கூடியதாயுள்ளது.[6]

மேற்கோள்கள்

  1. Florida, Nancy K Writing the past, inscribing the future: history as prophesy in colonial Java Durham, N.C. : Duke University Press, 1995 - Chapter. 5. The Demak Mosque: A Construction of Authority (Babad Jaka Tingkir). ISBN 0-8223-1622-6
  2. Turner, Peter (November 1995). Java. Melbourne: Lonely Planet. பக். 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86442-314-4.
  3. Turner, Peter (November 1995). Java. Melbourne: Lonely Planet. பக். 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86442-314-4.
  4. Turner, Peter (November 1995). Java. Melbourne: Lonely Planet. பக். 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86442-314-4.
  5. Schoppert, Peter; Damais, Soedarmadji & Sosrowardoyo, Tara (1998), Java Style, Tokyo: Tuttle Publishing, pp. 41, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-593-232-1.
  6. Schoppert, Peter; Damais, Soedarmadji & Sosrowardoyo, Tara (1998), Java Style, Tokyo: Tuttle Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-593-232-1.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.