கூரை

மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்தும், விலங்குகள், பறவைகள், வெளி மனிதர்கள் ஆகியோரின் ஊடுருவல்களிலிருந்தும் கட்டிடத்தின் உட் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டிடத்தின் மேற்பகுதியை மூடி அமைக்கப்படும் கட்டிடக் கூறே கூரை எனப்படுகின்றது. கூரைகள் இன்று பல வடிவங்களிலும் பல்வேறு கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. மழை மற்றும் பனிமழைகள் பெய்யும் இடங்களில் கட்டப்படும் மரபு சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் சரிவான கூரை அமைப்புக்களைக் கொண்டுள்ளன. இது கூரையில் விழும் மழை நீர் மற்றும் பனிக்கட்டிகள் முதலானவை இலகுவில் வழிந்தோடுவதற்கு இலகுவானது.

ஒரு மரபு சார்ந்த கூரை அமைப்பு

கூரையின் வகைகள்

கூரையின் வடிவம், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருட்கள், அமைப்புத் தொழில் நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.

  1. தட்டையான கூரைகள் (flat roofs)
  2. சாய்வான கூரைகள் (pitch roofs)
  3. கூடாரங்கள் (tents)
  4. குவிமாடக் கூரைகள் (domes)
  5. வளை கூரைகள் (vaults)
  6. Shells
  7. தொங்கல் அமைப்புக் கூரைகள் (suspension structures)
  8. Geodesic Domes

என ஏராளமான கூரை வகைகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இவற்றுட் சில பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்பாட்டில் உள்ளவை. சில வகைகள் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகள். சிலவகையான கட்டிடங்களில் கூரை, சுவர் ஆகியவற்றுக்கு இடையே வேறுகாடு காண முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சில வகைக் கூடாரங்கள், [[இக்லூ] போன்றவற்றில் கூரைகளே நிலம் வரை நீள்வதனால் சுவர் என்று தனியாக அடையாளம் காணப்படக்கூடிய எதுவும் கிடையாது.

கூரைக் கான கட்டிடப்பொருள்கள்

ஜோர்ண் அட்சன் என்னும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட சிட்னி ஒப்பேரா மண்டபம். இதன் முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்றுக் கூரை உலகப் புகழ் பெற்றது.

கூரைக்கான கட்டிடப் பொருட்களை அமைப்புச் சட்டகங்களுக்கான கட்டிடப் பொருட்கள், அவற்றின் மேல் மூடுவதற்குப் பயன்படும் பொருட்கள் என வகைப்படுத்த முடியும். மிகவும் அடிப்படையான புற்கள், இலை குழைகள், மண், கற்பலகைகள் என்பன தொடக்கம் காங்கிறீற்று, உருக்குத் தகடுகள், அலுமீனியம், ஈயம் வரையான பல்வேறு வகையான பொருட்கள் கூரையின் வெளிப்புற மூடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்புச் சட்டகங்களில், காட்டுத்தடிகள் மற்றும் மரங்கள், செம்மைப் படுத்தப்பட்ட மரம், உருக்கு, அலுமீனியம் போன்ற பொருட்களைக் காண முடியும். சிலவகைக் கூரை அமைப்புக்கள் அமைப்புச் சட்டகம், மூடல் எனத் தனித்தனியாக அமையாமல் இரண்டும் ஒன்றாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக, குவிமாடங்கள், வளை கூரைகள்(Vaults), shells முதலியவற்றில் அமைப்புக் கூறும், மூடற் கூறும் ஒன்றே.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.