திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.[1] இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது.
தேவாரம் பாடல் பெற்ற திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருமுருகன்பூண்டி |
அமைவிடம் | |
ஊர்: | திருமுருகன்பூண்டி [1] |
மாவட்டம்: | திருப்பூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருமுருகநாதர்[2] |
தாயார்: | ஆவுடை நாயகி, மங்களாம்பிகை |
தீர்த்தம்: | சண்முகதீர்த்தம்[1], ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்[1] |
சிறப்பு திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உண்டு |
தொலைபேசி எண்: | 91- 4296 273507 |
அமைவிடம்
இத்தலம், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்துக்கு அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் திருப்பூர் தொடருந்து நிலையம்; வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம்.
அஞ்சல் முகவரி: அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி - 641652 திருப்பூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: 91- 4296 273507
பாடல்பெற்ற தலம்
இத்தலம் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகநாதேசுவரரைச் சுந்தரர் பாடியுள்ளார்:
வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே.
-சுந்தரர்
கோவில்

முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.
கல்வெட்டுகள்

இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.
தல வரலாறு
பரிசில் பொருட்களுடன் கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்தார்.[3] தன் உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர். சுந்தரரரும் அவ்விடம் சென்று அங்கிருந்த சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக மரபுவரலாறு உள்ளது.
முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது.
ஆதாரங்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
- முழுத்தோற்றம்
- நுழைவாயில்
- முகப்பு
- முன்மண்டபம்
- கொடி மரம்
- மூலவர் சன்னதி விமானம்
- இறைவி சன்னதி விமானம்