தமிழ்வாணன்

தமிழ்வாணன் (மே 22, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.[1].

பத்திரிகைத் துறையில்

வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "துணிவே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்[1].

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து சவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார்[1]. இவருடைய ஒரு பக்க கட்டுரைகள் இன்றும் பிரபலமானவை.

கல்கண்டு வார இதழ்

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.

வேறு துறைகள்

  • "தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.[2]
  • தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை பிள்ளைப்பாசம், துடிக்கும் துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.[2]
  • காதலிக்க வாங்க என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன், கலைமாமணி விக்கிரமன், தினமணி, நவம்பர் 21, 2010
  2. ச. சுந்தரதாஸ் (நவம்பர் 2015). "இளைஞர்களைக் கட்சியில் சேர விடாமல் தடுத்த தமிழ்வாணன்". தமிழோசை அவுஸ்திரேலியா.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.