டீடெரிக் வொன் டொம்பர்க்

டீடெரிக் வொன் டொம்பர்க் (Diederik van Domburg) (1734 - 1736) இலங்கையின் ஒல்லாந்தர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் ஆளுனராகப் பதவி வகித்தவர். இவர் ஒரு வெற்றிகரமான ஆளுனராக விளங்கவில்லை. தனது நடவடிக்கைகள் காரணமாக இவர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியவரானார்.

பிரச்சினைகள்

இவர் காலத்தில் கண்டி அரசுக்கும், ஒல்லாந்தருக்கும் இடையே பகையுணர்ச்சி நிலவியது. ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவான குழப்பங்களை கண்டி அரசு மேலும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தது. முக்கியமாக கறுவா சீவும் தொழிலாளர்கள் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும், கடுமையான வேலை நிலைமைகள் குறித்தும் அதிருப்தி கொண்டிருந்தனர். டொம்பர்க்கின் பதவிக் காலத்தின் இறுதிப் பகுதியில் நிலைமை மோசமடைந்து தொழிலாளர்கள் கறுவா சீவச் செல்லாதிருந்ததனால் ஒல்லாந்தரின் கறுவா வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது[1]. அத்துடன் கம்பனியின் நிலக் கொள்கைகளினாலும் பிரச்சினைகள் உருவாகின.

கொழும்புக்கு அண்மையில் இருந்த ஹின கோரளை, சல்டிபிட்டி கோறளை, அளுத்குரு கோறளை ஆகிய இடங்களில் பொலயேபணம் என அழைக்கப்பட்ட தோட்ட வரியை டொம்பர்க் உயர்த்தினார். ஒல்லாந்த அரசுக்கு அறிவிக்காமல் வெற்று நிலங்களில் பயிர்களை நட்டுப் பயன் பெறும் குடியானவர்களிடம் இருந்து விளைவில் மூன்றில் ஒரு பங்கு வரியாக அறவிடப்பட்டு வந்தது. இதுவே டொம்பர்க்கினால் அரைப்பங்காக உயர்த்தப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே ஒல்லாந்தருக்கு எதிர்ப்பை உருவாக்கியது. இது தவிர, பள்ளித் தண்டப்பணம், ஆளுனரின் அடுக்களைத் தேவைகளுக்காக மக்கள் பொருட்களை வழங்கவேண்டியிருந்தமை போன்றவற்றினால் பல இடங்களில் மக்கள் வரி செலுத்த மறுத்தும், கம்பனியின் சொத்துக்களைத் தாக்கியும் குழப்பங்களை விளைவிக்கலாயினர். இது போலவே நாட்டின் தெற்குப் பகுதியிலும் வரி செலுத்துவது தொடர்பில் குழப்பங்கள் ஏற்பட்டன[1].

இறுதிக் காலம்

இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் ஒல்லாந்த அரசு திகில் அடைந்திருந்தது. டொம்பர்க் இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கான திறமை அற்றவராக இருந்தார். ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழிருந்த மலபார், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து படையினரை வரவழைத்து குழப்பம் ஏற்பட்ட இடங்களில் ஒடுக்குமுறையை இவர் கட்டவிழ்த்து விட்டார். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. நிலைமை தொடர்ந்தும் சீர் கேடான நிலையை அடைந்து வந்ததால் டொம்பர்க்கை திருப்பி அழைக்கவும், இவ்வாறான பிரச்சினைகளைத் திறமையாக் கையாளக்கூடிய ஒருவரை அவருக்குப் பதிலாக இலங்கைக்கு அனுப்பவும் பத்தேவியாவில் இருந்த மேலிடம் முடிவு செய்தது. கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் அடுத்த ஆளுனராக நியமிக்கப்பட்டார். ஆனால், இமோவ் இலங்கைக்கு வருவதற்கு முன்பே டொம்பர்க் காலமாகிவிட்டார்[2].

குறிப்புகள்

  1. Arasaratnam, S. பக். 458
  2. Arasaratnam, S. பக். 459

உசாத்துணைகள்

  • Arasaratnam, S., Baron van Imhoff and Dutch policy in Ceylon 1736-1740, Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 118 (1962), no: 4, Leiden, 454-468.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.