டி. பாலசுப்பிரமணியம்

டி. பாலசுப்பிரமணியம் (T. Balasubramaniam) தமிழ்த் திரைப்பட நடிகராவார். ஒரு எழுத்தாளராகவும் தமிழ்த் திரையுலகில் பங்களித்தார். பொன்னி திரைப்படத்தின் வசனம் எழுதுவதில் இவரின் பங்கும் இருந்தது. இந்தத் திரைப்படத்திற்காக சில பாடல்களையும் எழுதியிருந்தார்.[1]

1940களில் டி. பாலசுப்பிரமணியம்

வாழ்க்கைக் குறிப்பு

தமிழை தாய்மொழியாகக் கொண்ட டி. பாலசுப்பிரமணியம் இராயபுரம் ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை காரணமாக தகப்பனார் அவரது சகோதரர் வசிக்கும் ஜனாவரத்தில் சென்று வசித்து வந்தார். தாயாரும், பாட்டியாரும் முதலில் ஜார்ஜ் டவுனிலும், பின்னர் இராயபுரத்திலும் வசித்து வந்தனர். இங்கு தெலுங்கு பேசும் குடும்பங்கள் இருந்ததால், தெலுங்கை ஓரளவு பேசக் கற்றுக் கொண்டார். பாலசுப்பிரமணியத்திற்கு ஒன்பதரை வயதாகும் போதே தந்தை காலமானார். இதனால் பாலசுப்பிரமணியம் மீது குடும்ப சுமை வீழ்ந்தது. சிறு தொழில் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தோல்கிடங்கு, பூட்டுப்பட்டரை, மளிகைக் கடை, என சில இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் மாதம் ஏழு ரூபாய் சம்பளத்தில் வேலையில் அமர்ந்தார். சில காலத்தில் அங்கிருந்து விலக்கப்பட்டார். தந்தை பூசை செய்து வந்த பிள்ளையார் கோவிலில் பூசை செய்யும் பணி கிடைத்தது.[2]

நாடகங்களில் நடிப்பு

இந்நிலையில், ஜகன்னாதய்யரின் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையார் சென்னையில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களின் நாடகம் ஒன்றை தாயாருடன் சென்று பார்த்தார். அக்கம்பனியில் சேர்ந்து நாடகம் நடிக்கும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தாயாரின் அனுமதியுடன் கம்பனியில் சேர்ந்தார். அக்கம்பனியில் அப்போது கே. சாரங்கபாணி, பி. டி. சம்பந்தம் போன்ற பலர் நடித்து வந்தனர். ஐந்தாண்டுகள் அக்கம்பனியில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜகன்னாதய்யருடன் ஏற்பட்ட சிறு தகராறில் சில நடிகர்கள் அங்கிருந்து விலக நேரிட்டது. அதில் பாலசுப்பிரமணியமும் ஒருவர்.[2]

பின்னர் சென்னையில் வி. எஸ். சுந்தரேச ஐயர் எஸ்பிளனேட் அரங்கில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்த போது, நண்பர் ஒருவரின் உதவியால் அந்தக் கம்பனியில் உபநடிகனாகச் சேர்ந்தார். அதன் பிறகு ராவண கோவிந்தசாமி நாயுடு, மனமோகன அரங்கசாமி நாயுடு ஆகியோரின் நாடகக் கம்பனிகளில் பணியாற்றினார். 1929 முதல் 1931 வரை டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை என்பவரின் நாடகக் கம்பனியில் பணியாற்றினார். அக்கம்பனியில் அப்போது கே. ஆர். ராமசாமி, டி. ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து வந்தனர். இவர்களுடன் நடித்த பம்பாய் மெயில் நாடகம் அப்போது பிரபலமானது. 'இக்கம்பனியில் நடித்துக் கொண்டிருந்த போது 30வது அகவையில் திருமணம் நடந்தது.[2] பாலசுப்பிரமணியம் சேலத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன் பின்னர் திரைப்பட நடிகையான ஜி. சரஸ்வதியை திருமணம் புரிந்து கொண்டார். சரஸ்வதி மனோன்மணி உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு பசுபதி என்ற மகன் உள்ளார்.[2]

திரைப்படங்களில் நடிப்பு

டி. பாலசுப்பிரமணியம் பூலோக ரம்பை மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குபேர குசேலா திரைப்படத்தில் குபேரனாக நடித்தார். தொடர்ந்து கங்காவதார், பிரபாவதி, கிருஷ்ணன் தூது, கண்ணகி, மகாமாயா, ஜகதலப் பிரதாபன், சிவகவி, பூம்பாவை, உதயணன், என் மகன், வித்யாபதி, கன்னிகா, பைத்தியக்காரன், சிட்டாடலின் ஞானசௌந்தரி, அபிமன்யு, வேலைக்காரி, கிருஷ்ண பக்தி போன்ற திரைப்படங்களில் தோன்றினார்.[2]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. கண்ணகி (1942)
  2. என் மகன் (1945) - சிற்றூரில் வாழும் ஒரு பணக்காரத் தந்தையாக நடித்திருந்தார்.[3]
  3. வால்மீகி (1946) [4]
  4. பைத்தியக்காரன் (1947) [5]
  5. கன்னிகா (1947)
  6. ஞானசௌந்தரி (1948)
  7. கிருஷ்ண பக்தி (1949) [6]
  8. வேலைக்காரி (1949)
  9. திகம்பர சாமியார் (1950)
  10. சுதர்ஸன் (1951)
  11. கல்யாணி (1952)
  12. பொன்னி (1953) - செல்வந்தர் வேடத்தில் நடித்திருந்தார்.[1]
  13. அம்மையப்பன் (1954) [7]
  14. மாயா பஜார் (1957)
  15. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
  16. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959) [8]
  17. ஆளுக்கொரு வீடு (1960) [9]
  18. அன்புக்கோர் அண்ணி (1960)
  19. தோழன் (1960)

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (7 டிசம்பர் 2013). "Ponni (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/ponni-1953/article5433529.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2013.
  2. ராஜாராம், எம். (ஏப்ரல் 1949). "குணசித்திர நடிகர் டி. பாலசுப்பிரமணியம்". பேசும் படம்: பக். 18-33.
  3. ராண்டார் கை (10 சூன் 2010). "En Magan (1945)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/en-magan-1945/article451677.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  4. ராண்டார் கை (25 டிசம்பர் 2009). "Valmiki (1946)". தி இந்து. http://www.hindu.com/cp/2009/12/25/stories/2009122550541600.htm. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  5. ராண்டார் கை (13 சூன் 2008). "Paithiakaaran 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paithiakaaran-1947/article3023014.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  6. ராண்டார் கை (15 பிப்ரவரி 2008). "Krishna Bhakthi 1948". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/krishna-bhakthi-1948/article3022555.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  7. ராண்டார் கை (17 ஜனவரி 2015). "Ammaiyappan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-ammaiyappan-1954/article6796876.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  8. ராண்டார் கை (30 ஆகஸ்ட் 2014). "Koodi Vaazhnthaal Kodi Nanmai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past/article6365115.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
  9. ராண்டார் கை (9 ஆகஸ்ட் 2014). "Alukkoru Veedu (1960)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-alukkoru-veedu/article6299269.ece?ref=sliderNews. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.