செங்குரங்கு

செங்குரங்கு (Macaca sinica) எனப்படுவது இலங்கைக்குத் தனிச்சிறப்பான ஒரு சிறு குரங்கினமாகும். சிங்களத்தில் இது ரிளவா (රිළවා) என அழைக்கப்படுகிறது. இதன் தலையில் தொப்பி போன்ற அமைப்பில் தலைமுடிகள் செறிந்து வடிவமைந்திருக்கும்.

செங்குரங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முண்ணாணி
வகுப்பு: முலையூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Cercopithecidae
பேரினம்: Macaca
இனம்: M. sinica
இருசொற் பெயரீடு
Macaca sinica
(லின்னேயசு, 1771)
செங்குரங்குகளின் பரம்பல்

கூட்டமாக வாழும் இவ்வினம் ஓரணியில் கிட்டத்தட்ட 20 தனியன்கள் வரை கொண்டிருக்கும். செங்குரங்குகளின் தலையும் உடலும் சேர்ந்து 35-55 செமீ வரையும், வாலின் நீளம் 40-60 செமீ வரையும் இருப்பதோடு 8.5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும்.

செங்குரங்குகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்த போதிலும் பண்பாட்டு முக்கோணப் பகுதியில் ஏராளமாகக் காணப்படும். நிறைய பௌத்த விகாரைகள் காணப்படும் அப்பகுதியில் இவை பெரிதும் வாழ்வதால், விகாரைக் குரங்கு என்றும் அழைக்கப்படுவதுண்டு.

செங்குரங்குகளில் மூன்று துணையினங்கள் அறியப்பட்டுள்ளன. அவையாவன:

  • உலர் வலயச் செங்குரங்கு, Macaca sinica sinica
  • ஈர வலயச் செங்குரங்கு, Macaca sinica aurifrons
  • மலை நாட்டுச் செங்குரங்கு, Macaca sinica opisthomelas

பரம்பல்

ஒன்றையொன்று கவனித்துக் கொள்ளல்

உலர் வலயச் செங்குரங்குகள் (M. s. sinica) வவுனியா, மன்னார் என்பவற்றிலும், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல் மாவட்டங்களின் தாழ் நிலங்களிலும் மொனராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களின் வரண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.

ஈர வலயச் செங்குரங்குகள் (M. s. aurifrons) கேகாலை மாவட்டம், குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகள் என்பவற்றில் உலர் வலயச் செங்குரங்களுடன் சேர்ந்து வசிக்கின்றன. இவை இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளான காலி, மாத்தறை மாவட்டங்களிலும் களு கங்கைக்கு அருகிலும் காணப்படுகின்றன.

மலை நாட்டுச் செங்குரங்கு (M. s. opisthomelas) அண்மையில் அடையாளங் காணப்பட்ட ஒரு வேறுபட்ட துணையினமாகும். இவற்றை (இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லையுடன்) மத்திய மலை நாட்டின் தென்மேற்குப் பகுதி முழுவதிலும் நுவரெலியா மாவட்டத்திலும் காணலாம். இவற்றை ஹக்கலை தாவரவியல் பூங்காவைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஏனைய குளிர்ச்சியான கால நிலை கொண்ட மலைக்காட்டுப் பகுதிகளிலும் காணலாம்.[2] இவற்றை திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலும் காணலாம்.[3]

சீகிரியாப் பகுதியில் காணப்படும் உலர் வலயச் செங்குரங்கு


மேற்கோள்கள்

வெளித் தொடுப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.