சீயமங்கலம்
சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலூக்காவில் அமைந்துள்ள தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். இந்த ஊரின் மக்கள் தொகை, 2011 கணக்குப்படி 1665 ஆகும்[1].
பெயர் காரணம்
இந்த கிராமத்தின் பெயர் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது[2]. முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது[3].
அமைவிடம்
சீயமங்கலம், வந்தவாசிக்கு தென்மேற்காக 25 கி.மீ. தொலைவிலும், சேத்துபட்டிற்கு தென்கிழக்காக 21 கி.மீ. தொலைவிலும், மாவட்ட தலைநகர் திருவண்ணாமலைக்கு வடகிழக்காக 63 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.
போக்குவரத்து
வந்தவாசியிலிருந்து, செஞ்சி செல்லும் நகரப் பேருந்தும் (எண்:144), மகமாயி திருமேனி செல்லும் நகரப் பேருந்தும் (எண்: W2) சீயமங்கலம் வழியே செல்கின்றன. தேசூரிலிருந்து செஞ்சி செல்லும் தனியார் பேருந்து , V.M. சீயமங்கலம் வழி செல்கின்றது . இருப்பினும் , இந்த ஊருக்கு பேருந்துகள் அடிக்கடி இல்லை . பொதுவாக தேசூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்வது சிறந்தது.
ஊரைப்பற்றி
சீயமங்கலம் கிராமம் 1500 ஆண்டுகால வரலாற்று சிறப்பை உடைய ஊர். இந்த ஊருக்கு இந்த சிறப்பை அளிப்பவை, மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய ஏழாம் நூற்றாண்டு குடவரை சிவன் கோயிலும் , மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் கட்டிய ஒன்பதாம் நூற்றாண்டு சமண குடைவரை கோயிலும் ஆகும் . அதோடு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த ஆச்சார்யர் திக்நாகர் பிறந்த ஊரும் சீயமங்கலம் என்று நம்பப்படுகிறது.[4]
குடைவரை சிவன் கோயில்
இந்த குடைவரை கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள சிவன் தமிழில் தூண் ஆண்டார் என்றும் , சமஸ்கிருதத்தில் ஸ்தம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் முன் இரண்டு தூண்கள் உள்ளதால் தூண் ஆண்டார் என்ற பெயர் வந்திருக்கலாம். பிற கோயில்களைப் போல் அல்லாமல், இங்கு சிவலிங்கம் மேற்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. தலையில் திரிசூலம் போன்ற ஒரு விளிம்பு காணப்படுவது இந்த சிற்பங்களின் சிறப்பம்சம் ஆகும். கோவில் தூண்களில் சிவபெருமான், நடராஜர் உருவிலும் விருஷ்பாந்திகர் உருவிலும் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடராஜர் உருவம் முதன் முதலில் செதுக்கப்பட்டுள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதோடு, இங்குள்ள நடராஜர் சிற்பத்தில், குள்ளன் முயலகன் காணப்படவில்லை.
இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம், கோயிலுக்கு, பல்லவ , சோழ, நாயக்க மன்னர்கள் தானம் கொடுத்துள்ளதையும் , கோவிலை விரிவுபடுத்தி உள்ளதையும் அறிய முடிகிறது.
சமணக் குடைவரை கோவில்
மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் இந்த சமணக் குடைவரை கோயிலை கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டினான். தூனாண்டார் கோயிலுக்கு வடக்கே உள்ள விஜயாத்ரி என்னும் குன்றில் இந்தக் கோயில் காணப்படுகிறது. தற்போது இந்தக் குடைவரயினுள், ஒரு மகாவீரர் சிலை வைக்கப்பட்டு அருகிலுள்ள தமிழ் சமணர்களால் வழிபாடு செய்யப்படுகிறது.
குடைவரையின் மேல்புறம், கிழக்கு நோக்கி மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. பாகுபலிக்கு, இருபுறமும் அவருடைய சகோதிரிகள், பிராமி, சௌந்தரி காணப்படுகிறார்கள். பாகுபலியின் இடப்புறமாக மேலே ஐராவதம் யானை மேல் அமர்ந்த நிலையில் உள்ள இந்திரன் சிற்பம் காணப்படுகிறது. வலப்புறமாக மேலே, இரண்டு கந்தர்வர்கள் பாகுபலியை ஆச்சர்யத்துடன் பார்ப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. பார்சுவநாதர் அவருடைய யக்ஷன் தரனேந்திரனுடனும், யக்ஷி பத்மாவதியுடனும் காணப்படுகிறார். பார்சுவநாதரின் வலப்புறமாக மேலே கமடன், அவரைத் தாக்கும் நிலையிலும், இடப்புறமாக, யக்ஷி ஒரு குடையினால் அவரை காப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளது. மகாவீரர் சுகாசன நிலையில் யக்ஷன், யக்ஷியுடன் காணப்படுகிறார்[5].
சமணக் கல்வெட்டுகள்[6]
இங்கு இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்று, மகாவீரர் சிற்பத்திற்கு அருகில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு. இந்த கல்வெட்டு செய்யுள் வடிவிலும், உரைநடை வடிவிலும் வெட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள செய்திப்படி, சாகா 815 இல் (கி பி 892 -93) ராஜமல்லன் விஜயாத்ரி மலையில் இரண்டு சமண கோவில்களை அமைத்தான் என்றும், இங்கு ஜினேந்திர சங்கத்திற்கு உட்பட்ட நந்தி சங்கத்தை சேர்ந்த அருங்களான்வயம் (சமணப் பள்ளி) ஒன்று இருந்ததையும் அறிய முடிகிறது. இரண்டாவது கோவில் இன்று வரை கண்டறியப்படவில்லை.
இரண்டாவது கல்வெட்டு, குடைவரைக்கு சற்று தள்ளி வடக்கே உள்ள பாறையில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. செய்யுள் பகுதி சமஸ்கிருதத்திலும், உரைநடை பகுதி தமிழிலும் உள்ளன. இவைகளில் உள்ள செய்திப்படி, இங்கு திராவிட சங்கத்திற்கு உட்பட்ட நந்தி சங்கத்தை சேர்ந்த சமணப்பள்ளி இருந்ததையும், இந்தப்பள்ளியை சேர்ந்த மண்டலாசார்யரும், குனவீரரின் சிஷ்யருமான வஜ்ரநந்தி யோகிந்தரர், கோவிலுக்கு படிக்கட்டுகள் அமைத்ததையும் அறிய முடிகிறது. இன்றும் இந்த படிக்கட்டுகள் நல்ல நிலையில் இருக்கின்றன (பார்க்க படத்தொகுப்பு). முதல் கல்வெட்டில் ஜினேந்திர சங்கம் என்றிருந்தது, இரண்டாவது கல்வெட்டில் திராவிட சங்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
- http://www.indiamapped.com/tamil-nadu/tiruvannamalai/vandavasi/seeyamangalam/
- http://www.tamilartsacademy.com/journals/volume18/articles/article2.htm
- http://puratattva.in/2010/11/03/seeyamangalam-avanibhajana-pallaveshvaram-cave-temple-31.html
- மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்.102, பாவை பதிப்பகம், 2007, சென்னை
- முனைவர் ஏகாம்பரநாதன், தொண்டை நாட்டு சமண கோவில்கள், ஜைன இளைஞர் மன்றம், சென்னை
- P. Venkatesan, The Journal of the Epigraphical Society of India, Volume 11, pp.21-24, 1984, The epigraphical society of India, Dharwar.