சபா முற்போக்கு கட்சி

சபா முற்போக்கு கட்சி (Sabah Progressive Party, மலாய்: Parti Maju Sabah, சீனம்: 沙巴进步党) என்பது கிழக்கு மலேசியா, சபாமாநிலத்தைத் தளமாகக் கொண்டுள்ள ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். பி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஐக்கிய சபா கட்சியில் இருந்து வெளியேறிய டத்தோ யோங் தெக் லீ என்பவரால், 1994 ஜனவரி 21இல் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. யோங் தெக் லீ சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.

சபா முற்போக்கு கட்சி
Sabah Progressive Party
沙巴进步党
தலைவர்டத்தோ யோங் தெக் லீ
Datuk Yong Teck Lee
செயலாளர் நாயகம்ரிச்சர்ட் யோங் வீ கோங்
Richard Yong We Kong
தொடக்கம் சபா 1994 ஜனவரி 21
தலைமையகம் சபா கோத்தா கினாபாலு.
இளைஞர் அமைப்பு'சாப்' இளைஞர் அணி
SAPP Youth
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள்
2 / 222
மாநில சட்டசபைத் தொகுதிகள்
2 / 576
இணையதளம்
http://www.sapp.org.my/

சாப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சபா முற்போக்கு கட்சி, முன்பு பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. 2008 செம்படம்பர் மாதம் பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி ஒரு சுயேட்சை கட்சியானது.[1]

இந்தக் கட்சிக்கு மலேசிய நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்களும், சபா மாநிலச் சட்டசபையில் இரண்டு இடங்களும் உள்ளன. ஒரு நாடு இரு முறைமைகள் எனும் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கட்சி, கீழ்க்காணும் திட்டங்களை அமல்படுத்த, நடுவண் அரசை நெருக்கி வருகிறது.

  • போர்னியோவை போர்னியோ மயமாக்குவது
  • மாநில-நடுவண் அரசு உறவுகளையும் சட்டத்திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வது
  • சபா பூர்வீக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது
  • தன்னாட்சி கொண்ட சபா மாநில அரசைத் தோற்றுவிப்பது[2]

வரலாறு

மலேசியப் பொதுத் தேர்தல், 2008; மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சபா முற்போக்கு கட்சி இரு நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றது. 2008 தேர்தலுக்குப் பின்னர், சபா மாநிலத்திற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள் வழங்க வேண்டும் என்று மலேசிய நடுவண் அரசாங்கத்திற்கு, சபா அரசியல் கட்சிகள் அறைகூவல்கள் விடுத்தன.

அதைத் தொடர்ந்து 2008 ஜூன் 18இல் மலேசிய நாடாளுமன்றத்தின் டேவான் ராக்யாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சபா முற்போக்கு கட்சியின் தலைவராக இருந்த டத்தோ யோங் தெக் லீ அறிவித்தார்.[3]

சபாவிற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள்

மலேசிய நடுவண் அரசாங்கம், சபா மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத வகையில் நடந்து கொள்கிறது என்று சபா முற்போக்கு கட்சி குறை கூறியது. அத்துடன் சபாவிற்கு கூடுதலான தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும்; லாபுவான் தீவை சபா அரசாங்கத்திடமே ஒப்படைக்க வேண்டும்; எண்னெய் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தில் 20 விழுக்காடு சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளையும் முன் வைத்தது.[4]

சபா முற்போக்கு கட்சி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை பெரும்பாலான சபா மக்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டனர். ஏன் என்றால், அந்தச் சமயத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவர் மீது சில குறைகூறல்கள் இருக்கவே செய்தன.

பாரிசான் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்

இந்தக் கட்டத்தில் சபா முற்போக்கு கட்சியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாரிசான் நேசனல் கூட்டணியின் உச்சமன்றம் தயாரானது.[5] அதற்குள் 2008 செப்டம்பர் 17ஆம் தேதி, சபா முற்போக்கு கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[6] ஆனால், கட்சியின் துணைத் தலைவரும் உதவித் தலைவர்களில் ஒருவரும் பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை ஏற்றுக் கொள்லவில்லை. அவர்கள் பாரிசான் நேசனல் கூட்டணியிலேயே இருக்க விரும்புவதாக அறிவித்தனர்.[7]

2013 மே 5இல் நடைபெறவிருக்கும் மலேசியப் பொதுத்தேர்தலில், சபா முற்போக்கு கட்சி 8 நாடாளுமன்ற 41 சட்டசபை இடங்களில் போட்டியிடுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • Official web site சபா முற்போக்கு கட்சி இணையத்தளம்
  • SAPP Blog சபா முற்போக்கு கட்சி வலைப்பதிவு

மேலும் தகவல்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.