கெளசிக் பாசு

கௌசிக் பாசு (Kaushik Basu, பிறப்பு சனவரி 9, 1952) என்பவர் இந்தியப் பொருளியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். தற்போது உலக வங்கியில் முதன்மைப் பொருளியலாளராகவும் முது உதவித் தலைவராகவும் இருக்கிறார்.[1] இப்பதவிக்கு முன் இந்திய நடுவணரசின் முதன்மை பொருளியல் ஆலோசகராக இருந்தார். முன்னதாக சி. மார்க்சு பன்னாட்டு ஆய்வு பேராசியர் மற்றும் பொருளியல் பேராசிரியராகவும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராகவும் பொருளியல் பகுப்பாய்வு மையத்தின் இயக்குனராகவும் பொறுப்பாற்றி உள்ளார். இந்திய அரசின் முதன்மை பொருளியல் அறிவுரைஞராகவும் முன்னர் பணியாற்றி உள்ளார். ஒரு இந்தியர் உலக வங்கியின் முதன்மைப் பொருளியலாளராக பதவி வகிப்பது இதுவே முதன் முறையாகும்.

கௌசிக் பாசு
பிறப்பு9 சனவரி 1952 (1952-01-09)
கொல்கத்தா,  இந்தியா
தேசியம்இந்தியர்
நிறுவனம்உலக வங்கி
பயின்றகம்புனித இசுடீபன் கல்லூரி, தில்லி (இளங்கலைப் பட்டம்)
இலண்டன் பொருளியல் பள்ளி (முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம்)
தாக்கம்அமர்த்தியா சென்
விருதுகள்பத்ம பூசண் (2008)
தேசிய மகாலனோபிசு நினைவுப் பதக்கம் (1989)
பொருளியலுக்கான யுஜிசி-பிரபாவானந்தா விருது (1990)
ஆய்வுக் கட்டுரைகள்

கல்வி

கொல்கத்தாவில் பிறந்த கௌசிக் பாசு பள்ளிப் படிப்பை புனித சேவியர் பள்ளியில் முடித்தார். பின்னர் தில்லியில் புனித ஸ்டீபன் கல்லூரியில் பயின்று பொருளியலில் பட்டம் பெற்றார். லண்டன் பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றார். நோபல் பரிசு அறிஞர் அமர்த்தியா சென் வழிகாட்டலில் 'சாய்ஸ் 'என்னும் பொருளில் ஆய்வு செய்தார்.

பணிகள்

கார்னல் பல்கலைக் கழகத்தில் பொருளியல் பேராசிரியாகவும், சீ மார்க்ஸ் பேராசிரியராகவும் பதவி வகித்தபோதிலும் கௌசிக் பாசு தற்சமயம் விடுப்பில் உள்ளார். கார்னல் பல்கலைக் கழகமட்டுமன்றி தில்லிப் பொருளியல் பள்ளி, ஆர்வர்டு, ப்ரின்சுடன், எம். ஐ. தி. ஆகிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருந்தார். பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகிய பெரு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறார். அமர்த்தியா சென் தொடங்கிய அமைப்பான மனித வளர்ச்சி மற்றும் திறமைகள் கழகத்தின் தலைவராகவும் கெளசிக் பாசு பதவி வகிக்கிறார்.

பத்திரிக்கைப் பணி

நியூயார்க்கு டைம்சு, இந்தியா டுடே, சயன்டிபிக் அமெரிக்கன் போன்ற பல்வேறு இதழ்களிலும் செய்தித் தாள்களிலும் பொருளியல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சி. என். என். போன்ற தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்துப் பேசியுள்ளார். இருபதுக்கும் மேல் நூல்கள் எழுதியுள்ளார்.

விருதுகளும் பாராட்டுகளும்

லக்னோ பல்கலைக்கழகம், அசாம் பல்கலைக்கழகம், மும்பை ஐ ஐ டி, போர்தம் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிலையங்கள் கௌசிக் பாசுக்கு முனைவர் பட்டங்கள் அளித்து கவுரவித்தன. 2008 ஆம் ஆண்டில் இந்திய நடுவண் அரசு இவருக்குப் பத்ம பூசண் விருது அளித்துக் கவுரவித்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.