பார்வைக் குறைபாடு

பார்வைக் குறைபாடு (Visual impairment) என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் [1][2]. மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள். பெரும்பாலும் 20/40 அல்லது 20/60 அளவை விட மோசமான சிறந்த திருத்தப்பட்ட பார்வைத் திறன் கொண்ட கண்களின் நிலையை பார்வைக் குறைபாடு நிலையென வரையறுக்கப்படுகிறது . முழுமையாகப் பார்க்கும் திறனை இழந்த அல்லது கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழக்க இருக்கின்ற பார்வை இழப்பு நிலையை குருட்டுத்தன்மை என அழைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டுதல், படித்தல், நடத்தல், சமூகத்துடன் ஊடாடுதல் முதலான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பார்வையற்றோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பார்வைக் குறைபாடு
ஒத்தசொற்கள்பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம்
சிறப்புகண்
அறிகுறிகள்குறைவான பார்வைத் திறன் [1][2]
காரணங்கள்கண் அழுத்த நோய், கண் புரை நோய்,சிதறல் பார்வை [3]
நோயறிதல்கண் பரிசோதனைகள் [2]
Frequency940 மில்லியன் / 13% (2015)[4]

இந்த பார்வைக்குறைபாடு உடற்கூற்றியல் மற்றும் நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஒளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.

பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் சட்டக் குருட்டுத்தன்மைக்கான விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.[5] வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

பொருள்களிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படாமல் தோன்றும் திருத்தப்படாத ஒளிச்சிதறல் பிழைகளால் உலகளவில் 43% பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. கண்புரை நோயால் 33% பார்வை இழப்பும், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் 2% பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.[6].

காரணிகள்

பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.[7]

  1. கண் அழுத்த நோய் (Glaucoma) – இது கண்களுக்கு அபாயகரமான பாதிப்பை உண்டாக்கும். கண்ணிற்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதினால் பார்வை நரம்பு பாதிக்கப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின்னர் தமனியும் பாதிக்கப்பட்டு விழித்திரை சிதைவு ஏற்படுகிறது. சிறிது சிறிதாக பக்கவாட்டு கண்பார்வை குறைவு ஏற்படுகிறது. குளுக்கோமாவுக்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும் தொற்றுநோய் மற்றும் விபத்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  2. கண் புரை நோய் - குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது. வயதாகுதல், அதிக சூரிய ஒளிபடுதல், புகை பிடித்தல், உணவு பற்றாக்குறை, நீரிழிவு மற்றும் தொற்று நோய்கள் போன்றவை கண்புரை நோய் தோன்றுவதற்கு காரணமாகின்றன. கண் வில்லையில் ஒளிபுகும் தன்மை குரைபாட்டினால் கண்புரை நோய் ஏற்படுகிறது. சாதாரணமாக ஒளியானது வில்லையின் வழியாக ஊடுறுவி விழித்திரையை அடையும். ஒளிபுகும் தன்மை குறைவதினால் ஒளி விழித்திரையை அடைய முடிவதில்லை. எனவே கண்ணால் தெளிவாக காண இயலாது. இரண்டு வகையான கண் புரைகள் உள்ளன. அடர்மத்தி கண்புரை, வெளிப்புறக் கண்புரை என்பன அவ்விரண்டு வகைகளாகும்.
  3. விலகல் வழு - கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மூப்புப்பார்வை, விழிவில்லை பாதிப்பால் தோன்றும் சிதறல் பார்வை போன்ற குறைபாடுகள் ஒளிச்சிதறல் வகையால் தோன்றும் பார்வை இழப்புகளாகும். கண்ணின் பார்வைத் தன்மையை அறிந்து அதற்கேற்ற கண்ணாடிகளை உபயோகித்து இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம்.
  4. சிதறல் பார்வை அல்லது புள்ளிக்குவியமில்குறை
  5. மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய விழிப்புள்ளிச் சிதைவு. ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நாளாவட்டத்தில் சிலர் படிப்படியாக பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். முழு குருட்டுத்தன்மை இல்லாவிட்டாலும், கண்ணின் மத்தியப் பகுதியில் பார்வை இல்லாததால் தினசரி வாழ்வில் அனைத்து செயல்களும் கடினமாகி விடும். மரபணுக் காரணிகள் மற்றும் புகைபிடித்தலுக்கு இதில் முக்கியப் பங்குண்டு. விழித்திரையில் உள்ள மேக்யூலா (விழித்திரையின் மத்தியில் உள்ள நீள்வட்ட நிறமிப் பகுதி) பாதிப்பதால் இது ஏற்படுகிறது.
  6. நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு – விழித்திரையில் உள்ள தந்துகிகள் எனப்படும் நுண்ணிய இரத்தநாளங்களில் சிறிய பலூன் போன்ற புடைப்பு தோன்றுகிறது. இதனால் இரத்த நாளங்கள் வெடித்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவும். இரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படும். இதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
  7. கருவிழிப் பாதிப்பு (விழிப்படலம் படிதல்)
  8. குழந்தைப் பருவ பார்வையிழப்பு: குழந்தை தாயின் வயிற்றில், கருவாக இருக்கும் போதே நிகழும் சில பாதிப்புகளால், குழந்தை பிறப்பு!பிறக்கும்போதே குருட்டுத்தன்மை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சில வைரசு தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படலாம்.
  9. கண்ணில் ஏற்படும் பலவிதமான நோய்த்தொற்றுகள் காரணமாகவும் பார்வை இழப்பு ஏற்படலாம்.
  10. மரபணு வழுக்கள்: மரபணுக்களில் ஏற்படும் சில வழுக்களும் பார்வைக் குறைபாட்டைக் கொடுக்கும். எ.கா. அல்பினிசம் உள்ளவர்களில் பகுதியான அல்லது முழுமையான பார்வைக்குறைபாடு காணப்படலாம்.
  11. விபத்துக்கள் மற்றும் கண்ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள்: சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.
  12. வேதிப்பொருட்களால் ஏற்படும் காயங்கள்: அமிலங்கள் பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
  13. விளையாடும்போது ஏற்படும் காயங்கள்
  14. நிக்டோலோப்பியா – வைட்டமின் ஏ உயிர்ச்சத்து பார்வை நிறமிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதன் உற்பத்தி குறைவதால் மாலைக்கண் நோய் உண்டாகிறது. அதிகமான காலம் இக்குறைபாடு தொடர்ந்தாலும் பார்வை இழப்பு ஏற்படலாம்.
  15. இவற்றுடன் பக்கவாதம், குறைப்பிரசவம் போன்ற காரணங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புக்களும் பார்வைக்குறைபாட்டிற்குக் காரணமாகலாம்.[8]

தடுப்பு முறைகள்

பார்வைத்திறனை அளக்கப் பயன்படும் சினெல்லன் அட்டவணை

80% பார்வை குறைபாடு நோய்கள் முறையான சிகிச்சையால் தடுக்கக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.[3][9]

நோயியல்

2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர் [10] வயது: பார்வைக் குறைபாடு வயதுக் குழுக்களுக்கிடையில் சமமற்ற முறையில் பரவியிருக்கிறது. குருடாக இருக்கும் அனைத்து மக்களிலும் 82 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்கள் உலகின் மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர்.

மருத்துவ சிகிச்சை முறைகள்

மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:

  1. பொதுவாக கண் புரை நோய்க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக உள்விழி கண்ணாடி வில்லை பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
  1. பிழையான ஒளிவிலகல் மற்றும் சிதறல் பார்வைக் கோளாறுகளை, மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை, உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.

வழிகாட்டுதல்

பார்வைக் குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வடிவங்களில் வரலாம். அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் பல்வேறு அளவுகளில் மாறுபடலாம். ஒரு மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பார்வைத் திறன் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. 20/40 என்ற நல்ல பார்வைத்திறன் கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் சிரமப்படலாம். 20/200 என்ற மோசமான பார்வைத்திறன் அளவு கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம்.

ஒரு கண்ணின் பார்வை இழப்பு என்பது காட்சி அமைப்பின் 25% குறைபாடு என்றும் அந்த நபருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த குறைபாடு 24% என்றும் அமெரிக்க மருத்துவ கழகம் மதிப்பிட்டுள்ளது. இரு கண்களிலும் ஏற்படும் பார்வை இழப்பு மொத்தமாக காட்சி அமைப்பின் 100% பார்வை குறைபாடு என்றும் அந்நபரின் ஒட்டுமொத்த குறைபாடு 85% என்றும் இக்கழகம் கூறுகிறது.[11].

இத்தகைய பார்வை இழப்பு நிலைக்கு வரும் சிலர் மாற்று வழிமுறைகள் ஏதும் தேடாமல் தங்களிடம் கணிசமான மீதமுள்ள பார்வையைப் பயன்படுத்தி தினசரி செயல்பாடுகளில் ஈடுபடலாம். கண் மருத்துவரை அணுகி பார்வைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஒளியியல் கருவிகள், மின்னணு கருவிகள் மூலம் ஒளியை சரியான முறையில் விழித்திரையில் குவித்து கண்மருத்துவர் பார்வைக் குறையை சரிசெய்ய உதவுவார்.

தொழில்நுட்ப உதவிகள் பெறுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட தனிநபர்களால் நடத்தப்படும் பயிற்சிகளில் பார்வை இழப்புக்கு உள்ளானவர்கள் சேர்ந்து பயிற்சிபெற்று பயனடையலாம். பார்வை புனர்வாழ்வளிப்பு நிபுணர்கள் சில நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர், இவர்களால் மீதமுள்ள பார்வை அதிகரிப்பதற்கும், தன்னந்தனியாக தினசரி செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருளீட்டவும், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும் அறிவுரை வழங்க முடியும்.

பார்வைக்குறைபாடுள்ளவர்களின் நகர்திறன்

மேற்கோள்கள்

  1. "Change the Definition of Blindness". பார்த்த நாள் 23 May 2015.
  2. "Blindness and Vision Impairment" (February 8, 2011). பார்த்த நாள் 23 May 2015.
  3. "Visual impairment and blindness Fact Sheet N°282" (August 2014). பார்த்த நாள் 23 May 2015.
  4. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet (London, England) 388 (10053): 1545–1602. பப்மெட்:27733282.
  5. "Defining the Boundaries of Low Vision Patients". SSDI Qualify. மூல முகவரியிலிருந்து January 27, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 22, 2014.
  6. "Facts About Refractive Errors" (October 2010). மூல முகவரியிலிருந்து 28 July 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 July 2016.
  7. GLOBAL DATA ON VISUAL IMPAIRMENTS 2010. WHO. 2012. பக். 6. Archived from the original on 2015-03-31. https://web.archive.org/web/20150331221058/http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1.
  8. Lehman, SS (September 2012). "Cortical visual impairment in children: identification, evaluation and diagnosis.". Current Opinion in Ophthalmology 23 (5): 384–7. doi:10.1097/ICU.0b013e3283566b4b. பப்மெட்:22805225.
  9. "Causes of blindness and visual impairment". மூல முகவரியிலிருந்து 5 June 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 May 2015.
  10. Bosanquet N, Mehta P., P. Evidence base to support the UK Vision Strategy.RNIB and The Guide Dogs for the Blind Association
  11. Eye Trauma Epidemiology and Prevention Archived 2006-05-28 at the வந்தவழி இயந்திரம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.