கும்பகோணம் சுந்தரமகா காளியம்மன் கோயில்

கும்பகோணம் சுந்தரமகா காளியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள காளியம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

சுந்தரமகா காளியம்மன் கோயில்

இருப்பிடம்

இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது.

மூலவர்

இக்கோயிலில் கருவறையில் சுந்தரமகாகாளியம்மன் மூலவராக உள்ளார். மூலவரின் வலது புறம் பச்சைக்காளியும், இடது புறம் பவளக்காளியும் உள்ளனர். மூலவரின் முன்பாக பலிபீடம், நந்தி உள்ளன. கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர்.

சிறப்பு

இக்கோயிலில் நடைபெறும் படுகளம், பிறந்த வீட்டார் அழைப்பு, நகர்வலம் மிகவும் சிறப்பான விழாவாகும். [1] ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. [2]

படுகளக்காட்சி நிகழ்வு

பச்சைக்காளிக்கு (அக்காவிற்கு) குழந்தைகள் இல்லாததால் பவளக்காளியின் (தன் தங்கையின்) குழந்தைகளையும், தங்கையையும் பார்ப்பதற்காக தின்பண்டங்களை வாங்கிச்செல்கிறார். தங்கையோ, அக்கா பொறாமைப்படுவாள் என்று குழந்தைகளை தன் புடவையால் போர்த்தி மறைக்கிறார். கோபப்பட்ட பச்சைக்காளி குழந்தைகள் கல்லாகும்படி சபித்துவிடுகிறார். தன் தவறை உணர்ந்த பவளக்காளி, பச்சைக்காளியிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். பச்சைக்காளியான அக்கா, புனித நீர் தெளித்து தன் தங்கையான பவளக்காளியின் குழந்தைகளை உயிர்ப்பிக்கிறார். இதனை விளக்கும் வகையில் நடைபெறுவதே படுகளக்காட்சியாகும்.அப்போது கோயிலின் முன்பாக உள்ள பக்தர்கள் மீது புடவை போர்த்தப்பட்டு, அவர்கள் மேல் மஞ்சள் நீர் தெளித்து, அவர்களின் பாவங்களைப் போக்கும் நிகழ்வு நடைபெறும். அடுத்து ஊஞ்சல் உற்சவம், பிறந்த வீட்டுக்குச் செல்லும் நிகழ்வு, நகர்வலக்காட்சிகள் நடைபெறும். அடுத்த நாள் காவிரியாற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரைடன் பச்சைக்காளியும், பவளக்காளியும் வீதி உலா செல்வர். அடுத்த நாள் கோயிலுக்குத் திரும்புவர். அதனைத்தொடர்ந்து விடையாற்றி நடைபெறுகிறது. [3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.