குடவாயிற் கீரத்தனார்

குடவாயிற் கீரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல்களில் இவரது பெயரில் 18 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[1]

புலவர் பெயர் விளக்கம்

இவர் தன் பாடல் ஒன்றில் 'தேர்வண் சோழர் குடந்தை வாயில்' என்று குறிப்பிடுகிறார்.[2] இதனால் இந்தப் புலவர் இந்தக் குடவாயிலில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. கீரத்தனார் என்பது புலவர் பெயர். கீரன் அத்தன் என்னும் பெயர்களின் சேர்க்கை கீரத்தன். 'ஆர்' சிறப்புப் பெயர் விகுதி.

இவர் குறிப்பிட்டுள்ள மன்னர்கள்

அத்தி, எவ்வி, ஏற்றை, கங்கன், கட்டி, கணையன், சாத்தன்(ஒல்லையூர் கிழான் மகன்), சோழர், நன்னன், பழையன், புன்றுறை, பெரும்பூட் சென்னி, பொறையன், வழுதி ஆகிய மன்னர்களையும், கொங்கர், மழவர், வடுகர் ஆகிய குடிமக்களையும், 'நுணங்கு நுண் பனுவல் புலவன்' என்று புலவர் ஒருவரையும் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

குடவாயில் கீரத்தனார் சொல்லும் செய்திகள்

இவர் தம் பாடல்களில் பல அரசியல் நிகழ்வுகளையும், தமிழரின் பழக்கவழக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நிகழ்வுகள்

  • பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னன் அழும்பில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். குடவாயில், கழுமரம் ஆகிய ஊர்கள் அவன் நாட்டில் இருந்தன. சென்னியின் படைத்தலைவன் பழையன். இந்தப் பழையனை நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் என்னும் ஏழு பேர் சேர்ந்துகொண்டு கட்டூர் என்னுமிடத்தில் தாக்கினர். போரில் பழையன் கொல்லப்பட்டான். சோழன் கணையனைச் சிறை பிடித்தான். தன் நாட்டுக் கழுமலச் சிறையில் அடைத்தான். மற்றைய ஆறு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.[3]
  • சோழர்கள் தம் செல்வத்தைக் குடந்தையில் பாதுகாத்து வைத்திருந்தனர்.[4] இது சங்ககாலச் சோழர்களின் அரசுக் கருவூலம்.
  • மேற்குக் கடற்கரைத் துறைமுகமாகிய தொண்டி பொறை என்னும் கொங்கு நாட்டை ஆண்ட பொறையர் என்னும் அரசர்களுக்கும் துறைமுகமாக விளங்கியது. திண் தேர்ப் பொறையன் தொண்டி (அகநானூறு 60)
  • ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் இறந்தபோது சிறுவர், சிறுமியர், பாணன், பாடினி முதலான யாரும் முல்லைப்பூவைச் சூட்டிக்கொள்ளவில்லையாம். இந்தச் சாத்தன் வள்ளல் மட்டுமன்றி பெரு வீரனாகவும் விளங்கியவன்.[5]

வழக்கும் தீர்ப்பும்

எவ்வி நாட்டு உழவர்க்கும் உமணர்க்கும் இடையே சிறு பூசல். உழவர் நெல் தூற்றினர். அதன் தூசி உமணரின் உப்புப் பாத்தியில் படிந்துவிட்டது. உமணர்கள் உழவரின் இருப்பிடத்துக்கே வந்து சேற்று நிலத்தில் உழவரைத் தாக்கினர். பெருஞ் சண்டை மூண்டது. முதியவர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர். உமணர்களுக்கு உழவர்களைத் தேறல்-கள் வழங்கும்படி செய்து சண்டையைத் தீர்த்து வைத்தனர்.[6]

அணிகலன்

  • பளிங்குத் துளைகாசு - புறா உண்டபின் உதிர்த்த நெல்லிக்காய் நூல் அறுந்து சிதறும் பளிங்குக் காசு போல் இருந்ததாம்.[7]
  • வேங்கைப் பூவாலான தழையாடையை இடையில் அணிந்துகொள்வர்.[8] குடவாயிற் கீரத்தனார் குறிப்பிடும் வேங்கைப் பூவைப் பாடிய நுணங்கு நுண் பனுவல் புலவன் யார் என்பது விளங்க வில்லை.

தமிழர் பழக்கவழக்கங்கள்

  • நெய்தல் நில மகளிர் உப்பு விற்றுக் கொண்டுவந்த நெல்லைக் குற்றிப் புளிச்சோறு கட்டி மீன் பிடிக்கச் செல்வோரிக்குத் தருவார்கள்.[9]
  • தோலைக் கையில் சுற்றிக்கொண்டு [10] பாறையைத் தீப்பொறி பறக்கத் தோண்டி வரும் ஊறிய நீர் கொங்கர் மேய்க்கும் ஆனிரைகளுக்குக் குடிநீர்.[11]
  • குரம்பை வீட்டுப் பக்கத்தில் தாழியில் பருத்திச் செடி வளர்த்து, அதன்காய்களை வளர்ப்பு மான்களுக்கு ஊட்டுவர். வெடிக்கும் பருத்தியைப் பறித்து மடியில் கட்டிடிக் கொள்வர்.[12]

சிலம்புகழி நோன்பு

  • அவளுடைய காதலனுடன் தன் மகளை அனுப்பி வைத்த செவிலித்தாய் சிலம்பைக் கழற்றி வைக்கும் சிலம்புகழி நோன்பாகிய திருமண நிழ்ச்சி இல்லாமல் சென்றுவிட்டாளே என்று கலங்குகிறாள்.[13]
  • சிலம்பு கழி நோன்பு இல்லாமல் காதலனுடன் சென்ற தன் மகள் ஆலம் விழுதில் கட்டிய ஊஞ்சலில் அவளுடைய காதலன் அவளைடைய இடுப்பைப் பிடித்து ஆட்டி விட ஆடி மகிழ்ந்தாள் எனச் செவிலி ஒருத்தி குறிப்பிடுகிறான்.[14]

மக்களின் சமய நெறி

  • பாலைச் நிலத்தில் செல்வோர் மயில் பீலி, கடிகை, சுரைக்குடிக்கையில் சோறு, மரக்கொம்பில் செருகிய வேல் ஆகியவற்றைக் கொண்டு செல்வர்.[15][16]
  • ஆலம் விழுதின் கீழ் இருந்த கடவுளுக்கு நாள்தோறும் உணவுப்பலி ஊட்டுவர். அது விடுபட்டுப் போனதால் ஆண்மான் அதன்மேல் தன் மேனியை உரசிக்கொண்டதாம்.[17][18]

விளையாட்டு

  • நெய்தல் நில ஊதை மணலில் சிறுமியர் தோழிமாருடன் சேர்ந்து வண்டலும், ஓரையும் விளையாடுவர்.[19]

பாடலில் உவமை நலம்

  • வழிப்போக்கர் அறுத்துப் போட்ட துண்டுப் பிரண்டை பச்சைப் பாம்பு போல் வழியில் கிடக்கும் [20]
  • அவள் கண் சோழரின் குடந்தைவாயிலில் பூத்த நீல மலர போலவும், கைவிரல் பொதியமலையில் பூத்த காந்தள் மலர் போலவும் இருந்தன.[21]
பொதுச்செய்தி
  • யானை ஓமை மரப் பட்டைகளை விரும்பி உண்ணும்.[22]
  • கருக்கிலைப் பனைமரமும் காட்டுவேம்பும் மணல்பாலையின் மரங்கள்.[23]
  • வாகை நெற்று மகளிரின் காலணி சிலம்பு போல ஒலிக்கும்.[24]
  • காதலர் உப்பங்கழியில விளையாடுவர் [25]
  • தேரில் மணி கட்டியிர்ப்பர்.[26]
  • வடுகர் குடிப் பார்வை வேட்டுவன் பழக்கிய பெண்மானைக் கொண்டு ஆண்மானைப் பிடிப்பான்.[27]

அடிக்குறிப்பு

  1. அகநானூறு 44, 60, 73, 119, 129, 287, 315, 345, 366, 385 ஆகிய (10) பாடல்களைம், குறுந்தொகை 79 (இந்தப் பாடலின் ஆசிரியர் பெயர் குடவாயில் கீரன் நக்கன் எனச் சில பிரதிகளில் காணப்படுகிறது), 281, 369 ஆகிய (3) பாடல்களும், நற்றிணை 27, 42, 212, 379, ஆகிய (4) பாடல்களும், புறநானூற்றில் உள்ள 242ஆம் பாடல் ஒன்றும் என 18 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.
  2. நற்றிணை 379
  3. நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, கண்டது நோனானாகி, திண் தேர்க் கணையன் அகப்பட, கழுமலம் தந்த பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர், பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, தண் குடவாயில் அன்னோள் (அகநானூறு 44)
  4. வென் வேற் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் (அகநானூறு 60)
  5. ஆண்மை தோன்ற ஆடவர்க் க்கடந்த வல்வேல் சாத்தன் (புறநானூறு 242)
  6. களம் பொலிய, போர்பு அழித்து, கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, இருஞ் சேற்று அள்ளல் எறி, செருக் கண்டு, நரை மூதாளர் கை பிணி விடுத்து, நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் (அகநானூறு 366)
  7. புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, (அகநானூறு 315)
  8. நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் சில் நாள் கழிக (அகநானூறு 345)
  9. செங் கோல் அவ் வலை, நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகநானூறு 60)
  10. கையில் சுத்தியலின் அடி படாமல் இருப்பதற்காகக் கல்தச்சர் இக்காலத்திலும் உளி பிடிக்கும் கையில் தோலைச் சுற்றிக்கொள்வர்
  11. தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் (புறநானூறு 79)
  12. கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் (அகநானூறு 129)
  13. அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, (அகநானூறு 315)
  14. அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. (அகநானூறு 385)
  15. பீலியும் கடிகையும் சமணர் சின்னம்.
  16. தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, (அகநானூறு 119)
  17. தூங்கு நிலை, மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து (அகநானூறு 287)
  18. ஆலம் விழுது அடியில் உள்ள தெய்வம் ஆலமர் தெய்வமாகிய சிவன் போலும்
  19. ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, கோதை ஆயமொடு வண்டல் தைஇ, ஓரை ஆடினும் உயங்கும் (அகநானூறு 60)
  20. ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, (அகநானூறு 119)
  21. நற்றிணை 378
  22. கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை (குறுந்தொகை 79)
  23. குறுந்தொகை 281
  24. குறுந்தொகை 389
  25. நற்றிணை 27
  26. நற்றிணை 42
  27. நற்றிணை 212
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.