கிழமை

கிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று [1]. இஃது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக் கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று[2]. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாள்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாளாக அமைந்துள்ளன.

மேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிறமொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன், ஐந்து கோள்கள் என்பவற்றின் பெயர்களைத் தாங்கியுள்ளன.

தமிழ்க் கிழமைகள்

தமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

  1. ஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)
  2. திங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)
  3. செவ்வாய்க் கிழமை : செவ்வாய்
  4. புதன் கிழமை : புதன்
  5. வியாழக் கிழமை : வியாழன்
  6. வெள்ளிக்கிழமை : வெள்ளி
  7. சனிக் கிழமை : சனி

மேற்படி கிழமை (வார) நாள்களின் பெயர்கள் பரவலாகப் புழங்கிவரும் தற்காலத்திலும் சமயம் சார்பான அல்லது மரபுவழித் தேவைகளுக்கான இந்திய முறைகளில் மேற்படி பெயர்களோடு அங்காரகன்(செவ்வாய்), குரு (வியாழன்), மந்தன் (சனி), சோம வாரம் (திங்கட்கிழமை) போன்ற பலசொற்கள் கோள்களுக்கும் நாட்களுக்கும் ஆளப்படுவதும் உண்டு.

குறிப்புகள்

  1. கதிரவன், பகலவன், பொழுது, சுடரவன், வெயிலோன் என்று பல பெயர்களால் வழங்கும் ஒரு நாள்மீன்
  2. திங்கள், நிலா, அம்புலி, மதி என்று பல பெயர்களால் குறிக்கப்படும் நம் நில உலகின் ஒரே துணைக்கோள்

மேலும் காண்க

தமிழ் மாதங்கள்
தமிழ் வருடங்கள்
இந்துக் காலக் கணிப்பு முறை
நாள்
ஆண்டு

வெளி இணைப்புகள்


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.