கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்

இரண்டாம் உலகப் போரில் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (East African Front) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான், சொமாலியா, கென்யா, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். ஜூன் 10, 1940 - நவம்பர் 27, 1941 காலகட்டத்தில் இங்கு அச்சுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் (East African Campaign) என்றழைக்கப்படுகின்றன.

கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

கைது செய்யப்பட்ட இத்தாலியப் போர்க்கைதிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் பிரித்தானிய வீரர்கள் (செப்டம்பர் 1941).
நாள் ஜூன் 10, 1940 – நவம்பர் 27, 1941
இடம் சூடான், பிரித்தானிய சொமாலிலாந்து, கென்யா, எரிட்ரியா, இத்தாலிய சொமாலிலாந்து, பிரான்சிய சொமாலிலாந்து, எத்தியோப்பியா
நேச நாட்டு வெற்றி, இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்காவின் வீழ்ச்சி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
  • மற்றும் பிரித்தானியப் பொதுநலவாய நாடுகள்


பெல்ஜியக் காங்கோ
 சுதந்திர பிரான்ஸ்

 இத்தாலி
  • இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்கா
தளபதிகள், தலைவர்கள்
ஆர்ச்சிபால்ட் வேவல்
ரீட் காட்வின்-ஆஸ்டென்
வில்லியம் பிளாட்
ஆலன் கன்னிங்காம்
எத்தியோப்பியப் பேரரசு: முதலாம் ஹைலி செலாசி, அபீபி அரீகாய்
அயோஸ்டாவின் டியூக்  கைதி
குக்லியேல்மோ நாசி  கைதி
லூயிகி ஃபுரஸ்கி கைதி
பியேட்ரோ கசேரா கைதி
கார்லோ டி சிமொன்  கைதி
பலம்
20.000 (ஜூன் 1940); > 250.000 (ஜனவரி 1941) 74,000 இத்தாலியர்கள்,[1] 182,000 அஸ்காரி (எரிட்ரிய, எத்தியோப்பிய மற்றும் சொமாலிய காலனியப் படைகள்)[1]
இழப்புகள்
4,000+ இழப்புகள் 6,000+ இழப்புகள்
230,000 போர்க்கைதிகள்[2]

பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையின் கீழிருந்த இத்தாலி 1930களில் மற்ற ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளைப் போல தனக்கும் ஒரு காலனியப் பேரரசை உருவாக்கத் தீர்மானித்தது. 1936இல் எத்தியோப்பியாவைக் கைப்பற்றி இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரிட்ரிய காலனிகளை அதனுடன் ஒன்றிணைத்து “கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியப் பேரரசு” என்ற பெயரில் ஒரு காலனிய அரசை உருவாக்கியது. 1939ல் ஐரோப்பாவில் போர் மூண்டபின்னர் பிரித்தானியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளைக் கைப்பற்ற இத்தாலி முயன்றது. ஜூன் 10, 1940 இல் இத்தாலி எகிப்து மற்றும் பிரித்தானியக் கிழக்கு ஆப்பிரிக்கக் காலனிகளின் மீது படையெடுத்தது. ஜூலை 4 ஆம் தேதி கென்யா மற்றும் சூடானைத் தாக்கிய இத்தாலியப் படைகள் அவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவை பிரித்தானிய சோமாலிலாந்தின் மீது படையெடுத்தன. சில வாரகால சண்டைக்குப் பின் பிரித்தானியப் படைகள் பின் வாங்கின; சொமாலிலாந்து இத்தாலி வசமானது.

பிரித்தானிய சோமாலிலாந்தை மீட்க ஜனவரி 1941 இல் பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகள் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதல் மூன்று திசைகளிலிருந்து நடைபெற்றது. வடக்கில் லெப்டினண்ட் ஜெனரல் வில்லியம் பிளாட் தலைமையிலான ஒரு படை எரிட்ரியா மற்றும் சூடான் வழியாகத் தாக்கியது; தெற்கில் ஆலன் கன்னிங்காம் தலைமையிலான ஒரு படை கென்யா வழியாக சொமாலிலாந்து மீது படையெடுத்தது. இவை தவிர கிழக்கிலிருந்து கடல்வழியாக ஒரு படைப்பிரிவு சொமாலியாலாந்து மீது நீர்நிலத் தாக்குதல் நடத்தியது. எத்தியோப்பியாவின் உள்நாட்டு எதிர்ப்புப் படைகள் அந்நாட்டு மன்னர் முதலாம் ஹைலி செலாசி தலைமையில் இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தாக்கின. இவ்வாறு பலமுனைகளிலிருந்து நடைபெற்ற தாக்குதல்களை சமாளிக்க இயலாத இத்தாலியப் படைகள் தோல்வியடைந்தன. ஐந்து மாத கால சண்டைக்குப் பின், கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும் இத்தாலியக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டன. அடுத்த சில மாதங்களில் எஞ்சியிருந்த பகுதிகளும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. இத்தாலியின் முன்னாள் காலனிகள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தன.

படங்கள்

குறிப்புகள்

  1. Jowett, p.4
  2. Tucker (2005) p.400

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.