கலிப்பா

கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.

கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. [1] துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.

கலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வரா.


கலிப்பா உறுப்புக்கள்

பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.

கலிப்பா வகைகள் (தொல்காப்பிய நெறி)

கலிப்பாவானது ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என நான்கு வகைப்படும். [2] இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.

கலிப்பா வகைகள் (காரிகை நெறி)

மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,

  1. ஒத்தாழிசைக் கலிப்பா
  2. வெண் கலிப்பா
  3. கொச்சகக் கலிப்பா

என்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,

  1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
  2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
  3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

என மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,

  1. தரவுக் கொச்சகக் கலிப்பா
  2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
  4. பஃறாளிசைக் கொச்சகக் கலிப்பா
  5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.

இனங்கள்

கலிப்பாவின் இனங்கள்:

  1. கலித்துறை
  2. கலித்தாழிசை
  3. கலிவிருத்தம்

அடிக்குறிப்பு

  1. துள்ளல் ஓசை கலி' என மொழி தொல்காப்பியம் 2-388)
  2. ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டே,
    கொச்சகம், உறழொடு, கலி நால் வகைத்தே. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 435)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.