ஒத்தாழிசைக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பா என்பது தமிழ்ச் செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இது அடிப்படையாகப் பின்வருமாறு உறுப்புக்களைப் பெற்று அமைந்திருக்கும்:

தரவு - 1
தாழிசை - 3
தனிச்சொல் - 1
சுரிதகம் - 1

இக் கலிப்பாவகை மூன்று துணைவகைகளாகக் காணப்படுகின்றன. இவை பின்வருமாறு:

  1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
  2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
  3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா மேற்கூறிய அடிப்படையான உறுப்புக்களை மட்டுமே கொண்டிருக்க, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா கலிப்பாவுக்கு உரிய அம்போதரங்கம் என்னும் உறுப்பையும் கொண்டிருக்கும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அராகம் என்னும் இன்னொரு உறுப்பும் சேர, கலிப்பாவுக்கு உரிய ஆறு உறுப்புக்களையும் அது கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு

தரவு

வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?

தாழிசை

சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)

சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!

(ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.