அராகம் (யாப்பிலக்கணம்)

செய்யுளியலில் அராகம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் தரவு, தாழிசை என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து மூன்றாவது உறுப்பாக வரும். இது ஏற்ற இறக்கங்கள் அற்ற ஒலி அளவைக் கொண்டிருப்பது. இது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகளால் அமைந்திருக்கும். அராகங்கள், நான்கு தொடக்கம் எட்டு அடிகளைக் கொண்டவையாக அமைந்திருக்கலாம்.


எடுத்துக்காட்டுக்கள்

குமரகுருபரரின் சிதம்பரச் செய்யுட்கோவையிற் காணும் அராகப்பகுதி ஒன்று. எல்லாமே நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் அமைந்த நான்கு அராகங்கள் வந்துள்ளன.


கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
பிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல்
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. ..............(1)


உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்
மலர்மகள் கொழுநனு மகபதி முதலிய
புலவரு மடிகளொர் புகலென முறையிட
அலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை. .........(2).


விசையிலே மிறைவியும் வெருவர விரசத
அசலம தசைதர வடல்புரி தசமுக
நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென
வசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. ........(3)


இலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம
துலைவற நடவிடு மொருவனும் வெருவர
அலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு
சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. .........(4)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.