கர்ணன் (நீதிபதி)

சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் அல்லது சி. எஸ். கர்ணன் (ஒலிப்பு ) (Chinnaswamy Swaminathan Karnan or C. S. Karnan) (பிறப்பு: 12 சூன் 1955), கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் 12 சூன் 1955 அன்று பிறந்தவர்.[1] ஆசிரியரான இவரது தந்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். காலம் சென்ற இவரது தாயார் கமலம் அம்மாள், இல்லத்தரசியாக இருந்து கொண்டே குழந்தைகளுக்கு பள்ளிப்பாடங்கள் கற்றுக் கொடுத்தவர்.[2]

சி. எஸ். கர்ணன்
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூன் 12 1955
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கர்நத்தம் கிராமம்
சமயம் இந்து

இளமையும், கல்வியும்

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதியாண்டு வரை படித்து, பின் விருத்தாசலம் கலைக் கல்லூரியில் ஓராண்டு படிப்பான பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்து விட்டு, சென்னைப் புதுக்கல்லூரியில் மூன்றாண்டு அறிவியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1983-இல் சென்னை சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை முடித்தவர்.

வழக்கறிஞர் பணி

பின்னர் சென்னை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்த கர்ணன், சென்னை பெருநகரக் குடிநீர் வடிகால் துறையில் சட்ட ஆலோசகராகவும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் வழக்குகளை நடத்தி வந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக

சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார். பின்னர் நீதியரசர் கர்ணனை, இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகிப் போனார்.

இம்மாறுதல் உத்தரவு தொடர்பாக, நீதியரசர் சி. எஸ். கர்ணன் இந்தியப் பிரதமர் அலுவலகம், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பினார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிபதி சி. எஸ். கர்ணனின் செயல் நீதிமன்ற அவமதிப்பாக கருதிய இந்திய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.[3] [4] [5] இவ்வழக்கின் காரணமாக மே மாதம் 8 ஆம் திகதி 2017 ஆண்டு இவருக்கு உச்ச நீந்திமன்ற நீதிபதிகள் சகதீசு சிங் கேகர், தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர்,பி.சி.கோஸ், குரியன் ஜோசப் போன்றோரின் தீர்ப்பின்படி 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.[6]

கடைசி தீர்ப்பு

இவரின் பணி ஓய்வு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதியோடு முடிவடைகிறது. இந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு இவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.[7]

மேற்கோள்கள்

  1. Supreme Court issues bailable warrant against Calcutta HC judge CS Karnan for contempt
  2. நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை
  3. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வாரண்ட்
  4. துன்புறுத்தல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நீதிபதி கர்ணன் எச்சரிக்கை
  5. உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு தி இந்து தமிழ் 9 மே 2017
  6. நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணன் உத்தரவு தி இந்து தமிழ் மே 9 2017

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.