ஆசிரியர்களுக்கான தேசிய விருது

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. ஒருவர் இவ்விருது பெற ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகளும், தலைமை ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்.

தற்போதைய நிலையில் இவ்விருதின் மொத்த எண்ணிக்கை 378 ஆகும். இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலையாகவும், வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் மேதகு குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்படும்.

இவ்விருதின் ஒரு பகுதியாக வகுப்பறையில் கற்றல் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி தேசிய நல்லாசிரியர் விருதுகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

[1][2]

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. இறுதியாக விருதுக்குரியவர்களை நடுவண் கல்வி அமைச்சகம் தேர்வு செய்கிறது. இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசுத்தலைவர், விருதுகளை வழங்குவார். தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஒன்றிய அரசின் 'நல்லாசிரியர் விருது' பெறுவோருக்கு, குடியரசுத்தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து பெருமைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் தொடர்வண்டியில் இலவசமாகப் பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.