கபிலர் குன்று

கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். இது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர்பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.

கபிலர் குன்று

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

கபிலர் குன்று அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று" என்று அழைக்கப்பட்டது. இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.

பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது [1] திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,"செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது" [2] எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

சங்கப்பாடல் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தார் எனக் கூறும்போது, கல்வெட்டானது தீயில் இறங்கி உயிர் நீத்தார் என்கிறது.

இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.

அடிக்குறிப்பு

  1. புறம் 236, அடிக்குறிப்பு
  2. தெ.இ.க. தொகுதி 7, 863
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.