ஒப்பாரிப் பாடல்

ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.

சொற்பொருளியல்

இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம்புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.

ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள்

  “இளிவே இழவே அசைவே வறுமையென
  விளியில் கொள்கை அழுகை நான்கே”

என்று அழுகைப்பாட்டிற்கு இல்லக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர்.
ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன.
 
  “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
  கற்றோர் உரைப்பது கையறு நிலையே “

எனப் பன்னிரு பாட்டில் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.

  பாரி இறந்ததும் அவன் மகள்
  “ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்.....என்தையுமிலமே”
என வரும் புறநானுற்றுப் பாடலும்,
அதியமான் இறந்த பிறகு

  “ சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
  பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”

என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.[1]


மகனை பலிகொடுத்த தாய்

1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.


நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைபெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே நீ
இருந்த இடத்தைப் பார்த்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்த்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே

[2]

தாயாரின் ஒப்பாரி

 பொன்னான மேனியிலே - ஒரு
 பொல்லாத நோய் வந்ததென்ன
 தங்கத் திருமேனியிலே - ஒரு
 தகாத நோய் வந்ததென்ன...

மனைவியின் ஒப்பாரி

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு
இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

மேற்கோள்கள்

  1. நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.
  2. அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 – 52
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.