எட்டக எண்
எட்டக எண் அல்லது ஆக்டேன் எண் என்பது வாகன எரிபொருள் அல்லது பறனை எரிபொருள் ஆகியவற்றின் திறனை அளவிட உதவும் ஒரு குறியீடு ஆகும். இது பொறிபற்றி எரியும் உள்ளெரிப்பு எந்திரங்களில் பாவிக்கப்படும் கன்னெய் மற்றும் இதர எரிபொருள்களின் சுய பற்றிக்கொள்ளல் எதிர்ப்பை அளக்கும் ஒரு எண்ணாகும். எரிபொருளானது தானாகவே வெடிக்கும் நிலையை எய்தாமல் இருக்கும் குணத்தை அளக்க இது உதவுகிறது. இதனை உள்வெடிப்பெதிர்ப்பு என்றும் சொல்லலாம்.
ஐசோ ஆக்டேனும் ஹெப்டேனும் சேர்ந்த ஒரு கலவை குறிப்பிட்ட ஒரு எரிபொருளோடு ஒப்பிடும்போது அதே உள்வெடிப்பெதிர்ப்பைக் கொண்டிருந்தால், அந்தக் கலவையில் இருக்கும் ஐசோ ஆக்டேனின் விழுக்காட்டை அந்த எரிபொருளின் எட்டக எண் அல்லது ஆக்டேன் எண் என்று வழங்குவர். காட்டாக, 90% ஐசோ ஆக்டேனும் 10% ஹெப்டேனும் கலந்த ஒரு கலவையின் உள்வெடிப்பெதிர்ப்பை ஒத்திருக்கும் ஒரு கன்னெய்யின் எட்டக எண் 90 எனப்படும்.
ஐசோ ஆக்டேனின் எட்டக எண் 100 எனவும் n-ஹெப்டேனின் எட்டக எண் பூச்சியம் அல்லது சுழியம் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் கன்னெய் எட்டக எண் 87, 89, என்று இருக்கும். 87 எட்டக எண் கொண்ட கன்னெய்யை எடுத்துக் கொண்டால், அது 87% ஐசோ ஆக்டேனும், 13% ஹெப்டேனும் கொண்ட ஒரு கலவையின் உள்வெடிப்பெதிர்ப்பை ஒத்திருக்கும். இதனால் அந்தக் கன்னெய்யில் ஐசோ ஆக்டேன் இருக்கிறது என்றோ அது 87% இருக்கிறது என்றோ பொருளல்ல. அந்தக் கலவைக்கு உள்வெடிப்பெதிர்ப்பு எவ்வளவு இருக்குமோ அதே அளவிற்கு அந்தக் கன்னெய்க்கும் இருக்கும் என்பது பொருள். அவ்வளவே.
எட்டக எண் காட்டுகள்
n-ஆக்டேன் | -10 |
n-ஹெப்டேன் | 0 |
2-மெத்தில் ஹெப்டேன் | 23 |
n-ஹெக்சேன் | 25 |
2-மெத்தில் ஹெக்சேன் | 44 |
ஐதரசன் | >50 |
1-ஹெப்டீன் | 60 |
n-பென்ட்டேன் | 62 |
1-பென்ட்டீன் | 84 |
n-பியூட்டேன் | 91 |
cyclohexane | 97 |
ஐசோ ஆக்டேன் | 100 |
பென்சீன் | 101 |
E85 எத்தனால் | 105 |
மெத்தேன் | 107 |
எத்தேன் | 108 |
மெத்தனால் | 113 |
தொலுயீன் | 114 |
எத்தனால் | 116 |
சைலீன் | 117 |