உரும்பிராய்

உரும்பிராய் (Urumpirai) இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஓர் ஊராகும். இது, யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மானிப்பாய்-கைதடி வீதியும், இவ்வூரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பிராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பிராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.

உரும்பிராய்
நகரம்
Countryஇலங்கை
ProvinceNorthern
DistrictJaffna
DS DivisionValikamam East

பெயர்க்காரணம்

அக்காலத்தில் வழிபோக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. நிழல் தரு மரங்களுள் ஒன்றான பிராய் (அல்லது பராய்) என்ற பால் மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருந்தன. நன்றாகச் செழித்துப் படர்ந்து வளரக்கூடிய இம்மரத்துக்குப் பெருஞ்சூலி மரம் என்று இன்னொரு பெயருமுண்டு. பெரிய, உயரமான என்பதற்கு உரு என்றும் சொல்வர்[1]. இதனை விட வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே இக்கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். இருபத்தைந்தாம் பிராய் என்பதனை உ- 2, ரு - 5 – 25ம் பிராய் - உரும்பிராய் என வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது[2].

எல்லைக் கிராமங்கள்

கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும் மேற்கே இணுவில் உடுவிலும் வடக்கே ஊரெழுவும், நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கொண்ட இக்கிராமத்தில் 3753 குடும்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள்.

அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ்பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம் கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம், என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகளுட் சில.

ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கிருந்தன. பின்னர் உரும்பிராய், ஊரெழு ஆகிய கிராமங்கள் 1967 ஆம் ஆண்டில் பட்டினசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உபபிரிவாக இயங்கி வருகின்றது.

வேளாண்மை

செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஓர் இடமாகும். உரும்பிராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்குப் புதிய பயிர்களான திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 1970 தொடக்கம் 1980 ம் ஆண்டு வரை வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன. அதை தொடர்ந்து இன்று (2012) வரை இப் பிரதேசத்தில் இது போன்ற மேலும் பல பயிர்கள் வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன.

கோயில்கள்

உரும்பிராய், கற்பகப் பிள்ளையார் கோயில்

உரும்பிராயில் பல்வேறு இந்துக் கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில் என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கே தான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை இலங்கை நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்ததனால் இவ்வழக்கம் 2012 ம் ஆண்டு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

பாடசாலைகள்

இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பிராய் இந்துக் கல்லூரியாகும். இது பலாலி வீதியில் உரும்பிராய்ச் சந்தியிலிருந்து ஊரெழுவிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஆகிய பாடசாலைகளும் ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலைகளாகக் காணப்படுகின்றன.

சமயப் பின்னணி

பெரும்பான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவர்கள் பிற்காலத்திற் சைவசமயத்தினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸதாந்து சமயத்தையும் (அங்கிலிக்கன் சபை) தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது.

மேற்கோள்கள்

  1. தமிழ்நெட்டில் உரும்பிராய்
  2. ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.