பலாலி வீதி

பலாலி வீதி அல்லது யாழ்ப்பாணம் - பலாலி வீதி என்பது, 1850களை அண்டிய காலப்பகுதியில் பிரித்தானிய குடியேற்றவாத அரசினால் புதிதாக அமைக்கப்பட்ட வீதியாகும். யாழ்ப்பாணம் நகரில் இருந்து, குடாநாட்டின் வடக்கு நோக்கி பலாலி சந்தி (வடக்கு எல்லை) வரை செல்லும் வீதியாகும். பல கிராமங்களை ஊடறுத்துச் செல்வதனால் வீதியின் இருமருங்கிலும் அதிகமான குடியிருப்புக்கள் காணப்படுவதனாலும் அந்தந்த கிராம மக்களினால் இவ்வீதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வீதியோரத்தே வணிக மையங்களும், வழிபாட்டுத் தலங்களும் அதிகமாக அமைந்திருப்பதும் அதிகரித்த வீதிப் பயன்பாட்டிற்கு காரணமாகிறது.

தன்மை

இவ்வீதி ஏறத்தாள 18 கி.மீ. நீளமும், AB18 வீதி இலக்கமும் கொண்ட பிரதான பாதையாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பிரதான வீதிகளில் (காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி) பலாலி வீதி அமைவிடத்தின் தன்மையினால் குறிப்பிட்டு நோக்கப்படுகிறது. அத்துடன் வழைவுகள், முடக்குகள் அதிகம் இன்றி நேராக உள்ளது. 2011ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தார் வீதியாகக் காணப்பட்ட இவ்வீதி அதற்கு பிற்பட்ட காலத்தில் காபெட் இடப்பட்ட வீதியாக மாற்றப்பட்டதன் காரணமாக இவ்வீதியின் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இவ்வீதியில் முழுமையான வாகனப் பிரயாணத்திற்கு எடுக்கும் கால அளவு அரை மணி நேரமாகக் கொள்ளலாம்.

அமைவிடம்

பலாலி வீதி ஆரியகுளத்தில் ஆரம்பித்து இலுப்பையடி, கந்தர்மடம், பரமேஸ்வரா, திருநெல்வேலி, கோண்டாவில், உருப்பிராய், ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், வயாவிளான், பலாலி ஆகிய கிராமங்களை ஊடறுத்து பலாலி சந்தியில் முடிவடைகிறது. பலாலி விமான நிலையம், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை என்பன இவ் வீதியுடன் தொடர்புபட்டு உள்ளது. அத்துடன் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லுாரி, யாழ்.பல்கலைக்கழகம், திருநெல்வேலி அரசினர் விவசாயப் பண்ணை, அதனோடு ஒத்த அரசினர் விவசாயப் பாடசாலை, கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணிமனை, மற்றும் பிரபல்யமான அரச பாடசாலைகள் பலாலி வீதியில் அல்லது அண்மித்து இருப்பதனால் இவ்வீதி முக்கியத்தும் பெறுகிறது.

முக்கிய சந்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வரையான பலாலி வீதியின் குறுக்காக (கிழக்கு - மேற்காக) ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் பலாலி வீதியை ஊடறுத்துச் செல்லுவதனால் உண்டாகின்ற சந்திகள் பிரபல்யமான சந்தியாக செயல்படுவதனால் அந்தந்த கிராமங்களின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகிறது.

சந்தி ஊடறுக்கும் வீதி அமைவிடம்
ஆரியகுளம் சந்தி ஸ்ரான்லி வீதி ஆரியகுளம்
இலுப்பையடி சந்தி நாவலர் வீதி இலுப்பையடி
கந்தர்மடம் சந்தி நல்லுார்-ஓட்டுமடம் வீதி கந்தர்மடம்
பரமேஸ்வரா சந்தி இராமநாதன் வீதி திருநெல்வேலி
திருநெல்வேலி சந்தி ஆடியபாதம் வீதி திருநெல்வேலி
கோண்டாவில் சந்தி ஸ்ரேசன் வீதி-இருபாலை வீதி கோண்டாவில்
உரும்பிராய் சந்தி மானிப்பாய்-கைதடி வீதி உரும்பிராய்
தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி சுன்னாகம்-புத்துார் வீதி தெற்கு புன்னாலைக்கட்டுவன்
வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி அளவெட்டி வீதி வடக்கு புன்னாலைக்கட்டுவன்
வயாவிளான் சந்தி வல்லை-தெல்லிப்பளை-அராலி வீதி வயாவிளான்
பலாலி சந்தி பருத்தித்துறை-காங்கேசந்துறை வீதி பலாலி
முக்கிய சந்திகளும் அதன் அமைவிடமும் ஊடறுக்கும் வீதியுடன் தரப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவை

ஈழப்போர் காரணமாக 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்டாய இடப்பெயர்வுக்கு முன்னர் பலாலி வீதியில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளே பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்தன. ‌

  • நெடுந்துார - குறுந்துார சேவைகள் பின்வருமாறு அமைந்திருந்தது

நெடுந்துார சேவை

புறப்படும் இடம்சென்றடையும் இடம்ஊடாக

யாழ்ப்பாணம்காங்கேசந்துறைபலாலி
யாழ்ப்பாணம்பலாலி

குறுந்துார சேவை

புறப்படும் இடம்சென்றடையும் இடம்ஊடாக
யாழ்ப்பாணம்தெல்லிப்பளைவயாவிளான்
யாழ்ப்பாணம்வயாவிளான்
யாழ்ப்பாணம்புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்உரும்பிராய்

தனியார் சேவை

இதே பொது போக்குவரத்து சேவையில் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபையுடன் தனியார் சேவையினரும் இணைந்து சேவையில் ஈடுபட்டுவருகின்றனர். பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரி வரைக்கும் பேரூந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இயக்கப்படுகின்றது. எனினும் தேவைகருதி இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் குறுஞ்சேவைகளையும் மேற்கொள்வதுண்டு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.