ஆயி

ஆயி (Ai/Hai) என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும். எபிரேயத்தில் העי‎ என்னும் சொல்லுக்கு "அழிபாடு" என்பது பொருள் ஆகும்.[1]

யோசுவா "ஆயி" நகரைக் கைப்பற்றுதல். விவிலிய ஓவியம்: மார்கன் விவிலியக் கையெழுத்துப் படி. காலம்: 13ஆம் நூற்றாண்டு

தொடக்க நூலில் "ஆயி" நகர்

விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் ஆயி பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார் (தொநூ 12:8).

மேலும், ஆபிராம் "படிப்படியாகப் பயணம் செய்து பெத்தேலுக்குக் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்" (தொநூ 13:3) என்னும் குறிப்பும் தொடக்க நூலில் உள்ளது.

ஆயி என்னும் இடம் முற்காலத்தில் கானான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் அமைந்தது. கானான் பகுதி இன்றைய பாலஸ்தீனம், இசுரயேல், லெபனான், சிரியாவின் மேற்குப் பகுதி ஆகிய இடங்களை உள்ளடக்கிய நிலப் பிரதேசம் ஆகும்[2].

யோசுவா நூலில் "ஆயி" நகர்

யோசுவா என்னும் விவிலிய நூலில் இசுரயேலர் இருமுறை ஆயி நகரைக் கைப்பற்ற முயன்ற வரலாறு கூறப்படுகிறது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது (அதிகாரம் 7). இரண்டாவது முயற்சி வெற்றி கொணர்ந்தது. முதல் முறை தோல்வி ஏற்பட்டதற்குக் காரணம் ஆக்கான் என்பவன் செய்த பாவம் என்று யோசுவா 7 கூறுகிறது.

யோசுவாவின் தலைமையில் இசுரயேலர் கானான் நகர் ஆயியைக் கைப்பற்றச் சென்றார்கள். முதலில் சிறியதொரு படை சென்றது. அதை எதிர்த்து கானானியப் போர்வீரர்கள் வந்தனர். இசுரயேலர் படையினர் தப்பி ஓடுவதுபோல் பாசாங்கு செய்தனர். அப்போது ஒளிந்திருந்த இசுரயேல் பெரும்படையினர் வெளியே வந்து ஆயியைக் கைப்பற்றினர் (யோசுவா 8).

யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார் (யோசு 8:28).

அகழ்வாய்வுகள்

கி.பி. 1929இல் பாலஸ்தீனாவில் மேற்குக் கரையில் (West Bank) அமைந்துள்ள "எத்-தெல்" (அரபியில் et-Tell, "அழிபாட்டு மேடு") என்னும் இடத்தில் முதன்முறையாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே விவிலியத்தில் வருகின்ற "ஆயி" என்று பலர் கருதுகின்றனர். தொடர்ந்து நடந்த அகழ்வாய்வுகளின் விளைவாக, கி.மு. 3100ஐச் சார்ந்த பெரிய சுவர்களைக் கொண்ட பழம் நகர அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. சுமார் 2950-2860 அளவில் அந்நகர் தீக்கிரையாக்கப்பட்டு அழிந்ததற்கான தடயங்கள் உள்ளன.

தொடர்ந்து நிலநடுக்கத்தால் அழிவு ஏற்பட்டது (கி.மு. சுமார் 2720). ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது (கி.மு. 1200 அளவில்). இப்புதிய நகரத்துக்குக் காப்புச் சுவர்கள் எழுப்பப்படவில்லை. நிலம் பண்படுத்தப்பட்டு விவசாயம் நடந்தது.

எத்-தெல் அழிபாடுகள் ஆயி நகரம் முன்னாள் இருந்த இடத்தையே குறிக்கின்றன என்னும் கருத்து 1838இலேயே முன்வைக்கப்பட்டது. "ஆயி" என்றால் "அழிபாடு" என்று பொருள்படுவதாலும், யோசுவா நூல் "ஆயி" "அழிவின் மேடாக" மாறிற்று (யோசு 8:28) என்று குறிப்பிடுவதாலும் இந்தப் பெயர் வரலாறு ஏற்கப்பட்டது.

என்றாலும், விவிலிய வரலாற்றுப்படி, யோசுவா ஆயியைக் கைப்பற்றியது சுமார் கி.மு. 1400 என்றால் எத்-தெல் அகழ்வாய்வின்படி யோசுவா அங்கு சென்றபோது அந்நகரம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அழிவுற்ற நிலையிலேயே கிடந்தது என்பதை இசைவிப்பது கடினமாகிறது.

எனவே அகழ்வாளர்கள் வேறு சில கருத்துகளை முன்வைக்கின்றனர். விவிலியத்தில் ஓரிடத்தின் பெயரை விளக்குவதற்கு ஒரு கதை உருவாக்கும் பாணி உண்டு. ஆயி என்றால் அழிபாடு என்பது பொருள். யோசுவா கி.மு. சுமார் 1400இல் ஆயிக்குச் சென்றபோது அந்நகர் அழிபட்டுக் கிடந்தது. யோசுவாதான் அந்நகரை அழித்தார் என்று விவிலியக் கதை உருவாக்கப்பட்டது. இக்கருத்தை ஒட்டி இன்னொரு கருத்தும் உள்ளது. அதாவது யோசுவா அழித்த இடம் ஆயி அல்ல, மாறாக அதன் அருகே அமைந்த "பெத்தேல்" நகர் ஆகும் என்றும், அதையே விவிலியம் ஆயி என்று கூறுகிறது என்றும் கருதப்படுகிறது. இதையும் மறுத்து, பண்டைய ஆயி நகர் "கிர்பெத் எல்-மகதிர்" (Khirbet el-Maqatir) என்னும் இடம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.