என்றி மார்ட்டின்

என்றி மார்ட்டின் (Henry Martin, 1811 - மார்ச் 31, 1861) 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவரும் ஒரு பள்ளியாசிரியர், பத்திரிகையாளர், அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, தமிழ், ஆங்கில மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.

வரலாறு

என்றி மார்ட்டின், 1811 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிசன் தருமப் பாடசாலையில் பெற்ற பின்னர், தொடர்ந்து பட்டிகோட்டா செமினறியிலும் கல்வி கற்றார். பின்னர் அதே நிறுவனத்திலேயே ஆசிரியராகவும் பணியில் அமர்ந்தார். 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதல் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இருமொழிப் பத்திரிகையான இதில் இவர் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர் ஆவார். 1843ல், வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளர் என்னும் பதவியில் அமர்ந்தார். அத்துடன், உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அச்சியந்திரம் ஒன்றை வாங்கும் முயற்சியில் 1861 ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்ற இவர் திரும்பிவந்து சில நாட்களிலேயே காலமானார்.[1]

குறிப்புகள்

  1. மார்ட்டின், ஜோன். எச்.; 1923. பக். 176, 177.

உசாத்துணைகள்

  • மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.