வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள் எனப்படுபவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள உள்ள தளவாய் எனும் பகுதியிலுள்ள குன்றில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் ஆகும். மட்டக்களப்பு நகரிலிருந்து களுவாஞ்சிக்குடி (ஏ-4 நெடுஞ்சாலை) ஊடாக இப்பிரதேசத்தை அடைய கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். குன்றுகளும் பாறைகளும் நிறைந்த இடத்தில் பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் கிட்டத்தட்ட நான்கு சாசனங்களில் மூன்றில் உள்ள எழுத்துக்கள் சிதைவடைந்து காணப்பட ஒன்றில் தெளிவாகவுள்ளது.
இங்குள்ள குன்றுகள் மனித செயற்பாடுகளினால் செதுக்கப்பட்டு அல்லது வடிவமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இச்சாசனங்களின் காலம் 2200 வருடங்கள் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) பழமையானவை என்ற கருத்து நிலவுகின்றது.[1] இவை பிராமி-பிராகிருத கலப்பு என்ற கருத்தும் நிலவுகின்றது.[2]
சாசனத்தின் உள்ளடக்கம்
பிராமிச் சாசனத்தில் இடம்பெற்றுள்ள செய்தி:
“ | பருமக நாவிக ஷமதய லெணே | ” |
இதனை "பருமக என்ற பட்டத்துக்குரிய கப்பற் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை" எனப் பொருள் கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.[1] பெருமகன் என்னும் சொல்லே இக் கல்வெட்டில் 'பருமக' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, பாய்மரக் கப்பலைச் சங்கநூல்கள் நாவாய் எனக் குறிப்பிடுகின்றன. நாவாய் வாணிகன் 'நாய்கன்' எனப்பட்டான்.[3]
உசாத்துணை
- battinews.com. "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள் ! கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை - Battinews.com". www.battinews.com.
- "மட்டக்களப்பு: தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை – பேராசிரியர் சி.பத்மநாதன்". thesamnet.co.uk.
- கண்ணகி 'மாநாய்கன் குலக்கொம்பர்' (சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப் பாடல்)