வீர சந்தானம்

வீர சந்தானம் (இறப்பு: 13 சூலை 2017) என்பவர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1] மொழி, இனம், நாடு பண்பாடு தொடர்பான விதயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வந்தவர். தமிழ் பற்றாளரும் ஓவியருமான வீரசந்தானம், [[முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்|தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் உருவாக்கித் தந்தவர்.[2][3]

வீர சந்தானம்

இளமைக் காலம்

தஞ்சை மாவட்டம் கும்பக்கோணம் அருகில் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள். கல்லூரிப் படிப்பு கும்பக்கோணம் அரசுக் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மேல் படிப்பு சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும், சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசஸ்தானில் பனஸ்தலி வித்யா பீட் பல்கலைக்கழகத்தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் தனபால் (ஓவியர்) இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார். இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார்.

அலுவலகப் பணி

நெசவாளர் சேவை மையத்தில் பணியில் சேர்ந்தார் சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் அங்கு பணி செய்த பின்னர் விருப்ப ஒய்வு பெற்றார்.

கலைப் பணி

கல்தூண்களில் இடம்பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி அந்த வடிவமைப்பைப் பதித்து ஓர் அழகான விரிப்பைச் செய்தார். கன்னனூர் கோவில்களில் இருந்த வீரன், குட்டிச்சாத்தான், குளிகன் போன்ற வடிவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை தொகுத்து வடிவமைத்து திரைச் சீலைகளை உருவாக்கினார். தோல் பாவைக் கூத்து இவருக்குப் பிடித்த ஒன்று. தோல் பாவைக் கூத்து பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. திரிபுரா மாநில பழங்குடியினரின் மரபு கலை வடிவங்களை ஆடைகளில் அறிமுகம் செய்தார். புதிய உத்திகளைக் கையாண்டு பீங்கான், மெட்டல் ரிலீப் போன்ற பல வகையான பொருள்களைப் பயன்படுத்தி புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கி வருகிறார். சகட யாழ், மகர யாழ், காமதேனு எனத் தமிழர்களின் அடையாளங்களை ஓவியங்களாக எழுதியுள்ளார்.[4]

தஞ்சைக்கு அண்மையில் உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் கூடத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 இல் நிகழ்ந்த ஈழப் போரின் அவலங்களைச் சித்திரித்துக் காட்டுகின்றன.

திரைப்பட நடிப்பு

திரை இயக்குநர் பாலு மகேந்திராவின் சந்தியா ராகம் என்னும் படத்தில் நடித்தார். தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி அநேகன், அவள் பெயர் தமிழரசி ஆகியவை வீர சந்தானம் நடித்த பிற படங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.