வி. என். சுதாகரன்
வி. என். சுதாகரன், வி. கே. சசிகலாவின் மூத்த சகோதரியான வனிதாமணி – டி. டி. விவேகானந்தன் இணையருக்குப் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுதாகாரனை 1995-இல் வளர்ப்பு மகனாக ஏற்றுகொண்டார்.[1] அன்று முதல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் சுதாகரன் வாழ்ந்து வந்தார்.
சுதாகரனுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி சத்தியலெட்சுமிக்கும் 7 செப்டம்பர் 1995 அன்று ஏறத்தாழ எட்டு கோடி ரூபாய் செலவில், தமிழ்நாட்டு மக்கள் முகம் சுழிக்கும் வகையில், மிகவும் ஆடம்பரமாக சென்னையில் திருமணம் நடந்தேறியது.[2]
1996ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தோல்வி அடைந்தது. பின்னர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டதற்குப் பின் சுதாகரனை தனது வளர்ப்பு மகன் அல்ல என 25 ஆகஸ்டு 1996 அன்று ஜெயலலிதா அறிவித்தார். அன்று முதல் சுதாகரன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
பின்னர் சென்னை தியாகராய நகரில் குடியிருந்த சுதாகரன், சின்ன எம்ஜிஆர் நற்பணி மன்றம் மற்றும் ஜெஜெ தொலைக்காட்சியை நடத்தி வந்தார். 2001-இல் மீண்டும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததை அடுத்து, சுதாகரனை போதைப் பொருட்கள் மற்றும் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதியரசர் ஜான் மைக்கேல் டி` குன்ஹா (John Michael D'Cunha), சுதாகரனுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் பத்து கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சுதாகரன் இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் குமாரசாமி சுதாகரன் உள்ளிட்ட ஜெயலலிதா மற்றும் சசிகலா மற்றும் இளவரசியை விடுதலை செய்தது.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதியரசர் குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா அரசு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் ஜான் மைக்கேல் டி` குன்ஹா அளித்த தீர்ப்பை 14 பிப்ரவரி 2017-இல் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பினாகி சந்திர கோஸ் மற்றும் அமிதவ் ராய் உறுதி செய்தனர்.[3][4] சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு] இத்தீர்ப்பின் படி, 15 பிப்ரவரி 2017 அன்று சுதாகரன், ஜெ. இளவரசி, வி. கே. சசிகலா மூவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டனர்.[3]